வாடகை வீடுகளில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக புதிய வீடமைப்பு திட்டம்..
Related Articles
குறைந்த வருமானம் கொண்ட வாடகை வீடுகளில் வசிப்போருக்காக வீடமைப்பு திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. அதற்கென அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. காணிகள் மற்றும் வீடு இன்றி குறைந்த வசதியுடன் வாழும் வாடகை வீட்டிலுள்ளவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் வகையில் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாண கட்டிட மூலப்பொருட்கள் தொழிற்துறை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் ஊடாக குறித்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
4 அடுக்குகளை கொண்டதான தொடர்மாடி வீடமைப்பு திட்டத்தின் ஊடாக முதற்கட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதோடு, மாகாண மட்டத்தில் 464 வீடுகளை கொண்ட 9 தொடர்மாடி குடியிருப்புக்கள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களுக்கு அடிப்படை கொடுப்பணவு செலுத்த முடியா பட்சத்தில் மாதந்தம் 15 ஆயிரம் ரூபா எனும் அடிப்படையில் 31 வருடங்களுக்கு அதனை செலுத்தக்கூடிய வகையில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 2வது அல்லது 3ம் தலைமுறையினருக்கு வீட்டின் உரிமையை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலும் எந்தவொரு காரணத்திற்காகவும் வீட்டை விற்பனை செய்ய முடியாத வகையிலும் பயனாளர்களிடம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி, வீடமைப்பு அமைச்சர் என்ற வகையில் பிரதமர் முன்வைத்த கோரிக்கைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.