பெரு இராச்சியத்தில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்குண்டு இருவர் பலி..
Related Articles
பெரு இராச்சியத்தில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்குண்டு 2 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரு இராச்சியத்தின் வடபகுதியில் உள்ள மலைப்பாங்கான பகுதியொன்றிலேயே சம்பவம் இடம்பெற்றுள்ளது. பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் பகுதி மலைப்பாங்கான பகுதி என்பதால் வீடமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டாமென அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், குறித்த பகுதியில் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட 2 சடலங்களில் ஒரு மாதமே ஆன குழந்தை ஒன்றின் சடலமும் உள்ளடங்குகின்றது. மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் பல வீடுகள் புதையுண்டுள்ள நிலையில், காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்;டு பொலிஸ் திணைக்களத்தின் மீட்பு பிரிவு தெரிவித்துள்ளது. 8 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், 3 சிறுவர்கள் உள்ளடங்கலாக மேலும் 8 பேர் காணாமல் போயுள்ளதாக பெரு இராச்சியத்தின் பாதுகாப்பு அமைச்சர் ஜொஸ் லூயிஸ் கவிடியா தெரிவித்துள்ளார். இதேவேளை மண்சரிவு ஏற்பட்ட பகுதியை பெரு இராச்சிய ஜனாதிபதி பெட்ரொ கெஸ்டிலோ இன்றையதினம் நேரில் சென்று பார்வையிட்டுள்ளதாகவும் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.