ரஷ்ய யுக்ரேன் சமாதான பேச்சுவார்த்தை தற்போது யதார்த்தின் பக்கம் திரும்புவதாக யுக்ரேன் ஜனாதிபதி வல்டிமோர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். எனினும் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள இன்னும் சில காலம் தேவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை யுக்ரேனை ஒருபோதும் தனிமைப்படுத்த மாட்டோம் என ஐரோப்பிய நாடுகளின் பிரதமர்கள் சிலர் யுக்ரேன் ஜனாதிபதியை சந்தித்து உறுதியளித்துள்ளனர்.
போலந்து , சுலோவேனியா மற்றும் செக்குடியரசு ஆகிய நாடுகளின் பிரதமர்கள் நேற்று யுக்ரேனுக்கு சென்று அந்நாட்டு ஜனாதிபதி வால்டிமோர் செலன்ஸ்கியை சந்தித்தனர். ரஷ்ய தாக்குதலுக்கு மத்தியில் ஒருபோதும் தாம் யுக்ரேனை தனிமையில் விடமாட்டோம் என அவர்கள் இங்கு தெரிவித்தனர். அதேபோல் இந்த யுத்தத்தை தமது யுத்தமாகவும் கருதுவதாக அவர்கள் குறிப்பிட்டனர் .ரஷ்யா யுக்ரேனை ஆக்கிரமிக்க ஆரம்பித்தன் பின்னர் வெளிநாட்டு தலைவர்கள் யுக்ரேனுக்கு சென்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
யுக்ரேன் ரஷ்ய பிரதிநிதிகளுக்கு இடையில் 5 ம் சுற்று பேச்சுவார்த்தை இடம்பெற்றதோடு இன்றைய தினமும் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் இடம்பெறும் பேச்சுவார்த்தை சிறந்த பெறுபேற்றை நோக்கிச் செல்வதாக யுக்ரேன் ஜனாதிபதி தெரிவிக்கிறார். நேட்டோ அமைப்போடு இணையப்போவதில்லையென்ற உறுதி மொழி மற்றும் சுயாதீன இராச்சியமாக பெயரிடப்பட்டுள்ள டொனெஸ்க் , லுஹான்ஸ்க் மற்றும் கிரைமியா ஆகிய பகுதிகளை சுயாதீன இராச்சியங்களாக ஏற்றுக்கொள்ளுமாறு ரஷ்ய தரப்பு கோரி;க்கை விடுத்துள்ளது. இதுதொடர்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படுவதாக யுக்ரேன் ஜனாதிபதி தெரிவிக்கிறார்.
நேற்றைய தினமும் கியேவ் நகரை இலக்கு வைத்து ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் மேற்கொண்டதை அடுத்து நகரில் 35 மணித்தியால ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்யா இந்நகர் மீதான தாக்குதலை மேலும் அதிகரித்துள்ளது. மரியுபோல் நகரில் மக்களை தடுத்து வைத்துள்ளதாக ரஷ்ய இராணுவம் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. இதனிடையே கேர்ஷன் நகரை முழுமையாக கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
ரஷ்யாவின் தாக்குதல்கள் காரணமாக யுக்ரேனுக்கு 500 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பினாலான சேதம் ஏற்பட்டுள்ளதாக யுக்ரேன் பிரதமர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் நட்டம் தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் வெளியிடப்படவில்லை.
இதேவேளை அமெரிக்க தலைமையிலான மேற்கத்தய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக விடுத்துள்ள தடைகளை மேலும் வலுவாக்க நடவடிக்கை எடுத்துள்ளன. குறித்த தடைகள் அறிவிக்கப்பட்டமைக்கு பதிலளிக்கும் வகையில் ரஷ்யா, அமெரிக்க நாட்டவர்கள் 13 பேருக்கு ரஷ்யாவுக்குள் நுழைவதை தடுக்கும் வகையில் உத்தரவிட்டுள்ளது. அந்த 13 பேரில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் பெயரும் உள்ளடக்கம்.