யுத்தத்தினால் நாட்டை விட்டு வெளியேறினர்.. 20 இலட்சம் யுக்ரேனியர்கள்..
Related Articles
ரஷ்யாவிற்கும் யுக்ரேனுக்கும் இடையிலான மோதல் ஆரம்பமாகி 2 வாரங்கள் கடந்துள்ள நிலையில் ரஷ்ய இராணுவம் யுக்ரேன் தலைநகர் கிவ் இற்கு 15 மைல் தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இதேநேரம் மோதல்களுக்கு மத்தியில் 2 மில்லியன் யுக்ரேன் நாட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இரண்டு வாரங்களாக நடைபெறும் மோதலுக்கு ஓய்வளிக்கும் வகையில் ரஷ்ய மற்றும் யுக்ரேன் அதிகாரிகள் நேற்றைய தினம் போர் நிறுத்தத்திற்காக இணக்கப்பாட்டை எட்டினர். பொதுமக்களை பாதுகாப்பாக அகற்றிக் கொள்வதற்கு 12 மணித்தியால போர் நிறுத்தத்தை பிரகடனப்படுத்த தீர்மானிக்கப்பட்டது. நேற்று ஆரம்பமான பொது மக்களை அகற்றும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரம் நகரவாசிகள் மற்றும் 10 ஆயிரம் வாகனங்கள் இவ்வாறு நகரிலிருந்து அகற்றப்பட்டுள்ளன. கிவ், சேர்ணிஹிச், சுமி, கார்கிவ் மற்றும் மரியுபோல் ஆகிய நகரங்களிலிருந்து மக்களை அகற்றிக்கொள்வதற்காக போர் நிறுத்த காலப்பகுதியில் இராணுவத்தினர் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டனர். போலாந்து மற்றும் பல அயல்நாடுகள் யுக்ரேனிலிருந்து தப்பிவந்த ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அரவணைப்பை வழங்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ரஷ்யா, உயிரியல் இரசாயன தாக்குதலுக்கு தயாராகியுள்ளதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. தாக்குதலை மேற்கொள்வதற்கு தேவையான பின்புலங்களை ரஷ்யா தற்போது உருவாக்கி வருவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. யுக்ரேனுக்கு எதிரான இந்த கொடுர தாக்குதலை தோல்வியடையச் செய்ய வேண்டுமென வெள்ளை மாளிகை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. இதேநேரம் ரஷ்ய இராணுவத்தினர் யுக்ரேன் தலைநகர் கிவ் யை சுற்றிவளைத்துள்ளதை யுக்ரேன் படையினர் ஏற்றுக்கொண்டுள்ளனர். ரஷ்யாவிற்கு சொந்தமான பாரிய இராணுவப் படை கிவ் நகருக்கு 15 மைல் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இவர்கள் எரிபொருள் தட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களுக்கான உராய்வு எண்ணெய் மற்றும் எரிபொருளை வழங்குவதற்கு பெலாரஸ் நாடு முன்வந்துள்ளது.
இதேநேரம் யுக்ரேன் வெளிவிவகார அமைச்சர் திமித் ட்ரோ குபேலா மற்றும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்கே லெவ்ரோவ் ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பு இன்று துருக்கியில் ஆரம்பமானது. ரஷ்ய – யுக்ரேன் மோதல்கள் ஆரம்பமானதைத் தொடர்ந்து இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களும் சந்தித்துக் கொள்ளும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
இதேநேரம் முழு உலகத்தையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி யுக்ரேனின் மரியுபோல் நகரில் அமைந்துள்ள தாய் சேய் மருத்துவமனை மீது ரஷ்யா ரொக்கெட் தாக்குதலை மேற்கொண்டது. தாக்குதலில் வைத்தியசாலையின் பல வோட் தொகுதிகள் முழுமையாக அழிவடைந்ததுடன் வைத்தியசாலை ஊழியர்கள் தாய்மார் உட்பட 17 பேர் காயமடைந்தனர். மூவர் உயிரிழந்ததுடன் உயிரிழந்தவர்களில் சிறு பிள்ளையும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதலில் அழிந்த கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்குண்டுள்ளவர்களை தேடி தொடர்ந்தும் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. தாக்குதலினால் தாம் பேரதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் இது கண்மூடித்தனமான செயல் எனவும் ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. தாக்குதல் தொடர்பில் பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் கடும் விமர்சனங்களை ரஷ்யா மீது முன்வைத்துள்ளன. இதேநேரம் யுக்ரேன் ஜனாதிபதி விளோடிமர் செலன்ஸ்கி விடுத்துள்ள அறிக்கையில் மருத்துவமனையை இலக்காக கொண்டு ரஷ்யா நடத்திய இந்த தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக குறிப்பிட்டுள்ளார். இது மாபெரும் யுத்த குற்றமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இக்குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள ரஸ்யா, தாம் ஒருபோதும் பொதுமக்களை இலக்குவைத்து தாக்குதலை மேற்கொள்ளவதில்லையென தெரிவித்துள்ளது.
இதேநேரம் யுக்ரைனுக்கு 13.6 பில்லியன் டொலர் நிதியுதவியை வழங்குவதற்கு அமெரிக்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஜோபைடன் அறிவித்துள்ளார்.யுக்ரேனின் யுத்த நடவடிக்கைகளுக்காக மிக் ரக தாக்குதல் ஜெட் விமானங்கள் 20 ஐ வழங்குவதற்கு போலாந்து அண்மையில் சமர்ப்பித்த யோசனைக்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்திருந்தது. குறித்த விமானங்களை ஜேர்மனியிலுள்ள அமெரிக்காவுக்கு சொந்தமான ரென்ம்ஸ்டைன் இராணுவ முகாமுக்கு வழங்குவதற்கு போலாந்து அனுமதி கோரியதால், அது நிராகரிக்கப்பட்டிருந்தது. மிக் விமானங்கள் தொடர்பில் இவ்வாறு கருத்து மோதல்கள் நிலவும் பின்னணியில் அமெரிக்க உப ஜனாதிபதி கமலா ஹரிஸ் போலாந்தின் வோர்சோ நகருக்கு விஜயம் செய்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது.