அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் அமைச்சுக்களுக்கான விடயதானங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அண்மையில் அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்பட்டு புதிய அமைச்சுக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டன. இந்நிலையில் அமைச்சுக்களுக்கான விடயதானங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. வனஜீவராசிகள், வனவள அபிவிருத்தி அமைச்சு, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு, அனர்த்த முகாமைத்துவ அமைச்சு ஆகிய அமைச்சுக்களின் விடயதானங்களே வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் வனபாதுகாப்பு திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், தேசிய மிருகக்காட்சிசாலை திணைக்களம் மற்றும் அரச மரக்கூட்டுத்தாபனம் என்பன வனஜீவராசிகள் மற்றும் வனவள அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பதிவாளர் நாயகம் திணைக்களம், குடிவரவு, குடியகழ்வு திணைக்களம், இரத்தினா பாதுகாப்பு திணைக்களம், தேசிய பாதுகாப்பு நிதியம், இராணுவ சேவை அதிகார சபை மற்றும் நமக்காக நாம் நிதியம் ஆகியன பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் கீழ் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், அவசர அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான தேசிய சபை, தேசிய அனர்த்த நிவாரண சேவை மத்திய நிலையம், வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் தேசிய கட்டிட ஆய்வு நிறுவகம் ஆகியன அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் என வர்த்தமானி அறிவித்தலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.