தாய்வானிடமிருந்து யுக்ரேனுக்கு நேசக்கரம்..
Related Articles
தாய்வான் ஜனாதிபதி ஷாய் இங் வேன், உப ஜனாதிபதி வில்லியம் லாய், பிரதமர் ஷூ செங் ஜாங் ஆகியோர் தமது ஒரு மாத சம்பளத்தை யுக்ரேனின் மனிதாபிமான நிவாரணங்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளனர். ரஷ்யாவின் யுக்ரேன் மீதான இராணுவ நடவடிக்கையையடுத்து அங்குள்ள மக்களின் நிலையை உணர்ந்து குறித்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தாய்வான் அறிவித்துள்ளது. சீனாவுடன் காணப்படும் பதற்றத்திற்கு மத்தியில் தாய்வானின் குறித்த செயற்பாடு சர்வதேச அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. சீனா தாய்வானை தமது சொந்த பிரதேசமாக கருதி இராணுவ அழுத்தங்களை வழங்கி வரும் நிலையில், யுக்ரேனின் நிலையை நன்கு உணர்வதாக தாய்வான் அறிவித்துள்ளது. இந்நிலையில் தாய்வான் அரசாங்கத்தின் முதற்கட்ட நிவாரண உதவிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 27 டொன்கள் நிறையுடைய மருத்துவ உதவிப்பொருட்கள் தாய்வானிலிருந்து யுக்ரேன் மக்களுக்கான அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ரஷ்யா, யுக்ரேன் மீதான நடவடிக்கையை சிறப்பு நடவடிக்கையென குறிப்பிட்டிருந்தாலும், சர்வதேச ரீதியிலான ஜனநாயக ஆதரவு யுக்ரேனுக்கும் அதிகரித்து வருவதாகவும் தாய்வான் பிரதமர் ஷாய் இங் வென் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தாய்வானின் முழுமையான ஆதரவு யுக்ரேனுக்கு வழங்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.