கொள்கை ரீதியான விடயங்களை அடிப்படையாக வைத்து ரஷ்யாவுடனான மாநாட்டில் தான் கலந்துகொள்ளத் தயார் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஐரோப்பாவுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவர பிரான்ஸ் ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைவாகவே ரஷ்ய அமெரிக்க மாநாடு இடம்பெறவுள்ளது.
ரஷ்யாவுடன் மாநாடொன்றை நடத்த பிரான்ஸ் அண்மையில் யோசனை ஒன்றை முன்வைத்தது. பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு இடையில் சுமார் 3 மணித்தியாலம் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலை அடுத்தே மாநாட்டுக்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் குறித்த மாநாட்டில், ரஷ்யா யுக்ரேனை ஆக்கிரமிப்பதை நிறுத்தினால் மாத்திரமே அமெரிக்க ஜனாதிபதி பங்கேற்கப் போவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. குறித்த மாநாட்டின் ஊடாக யுக்ரேன் ரஷ்ய நெருக்கடிக்கு ராஜதந்திர தீர்வொன்றை வழங்க முடியுமென பிரான்ஸ் நம்பிக்கை வெளியி;ட்டுள்ளது. மாநாடு இடம்பெறும் தினம், நேரம் மற்றும் காலம் தொடர்பில் அமெரிக்க ராஜாங்க செயலாளர் ரஷ்ய வெளிவிவகார அமைச்சருக்கு இடையில் இடம்பெறும் கலந்துரையாடலை அடுத்து தீர்மானிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.