தேசத்தை கட்டியெழுப்புவதற்கு சகலரும் ஒன்றிணைய வேண்டுமென்பதை மறந்துவிடக்கூடாதென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொவிட் பெருந்தொற்றுக்கு பின்னரான காலப்பகுதியில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான பொறுப்பு சகலருக்கும் காணப்படுவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒக்ஸ்போர்ட் கொலஜ் ஒப் பிஸ்நஸ் கல்லூரியின் வருடாந்த பட்டமளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் 507 பட்டதாரிகளுக்கு பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். சிறப்பு தேர்ச்சியடைந்த பட்டதாரிகளுக்கு பிரதமரின் கரங்களினால் நினைவு சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன. இதுவரை காலமும் பின்பற்றிய தொழிற்துறை மனநிலையிலிருந்து மாறி உலகத்திற்கு ஏற்ற புதிய தொழிற்துறை பிரவேசத்தை நாட்டில் முன்னெடுக்க வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அதன்போது கல்வியியலாளர்களுக்கு சுட்டிக்காட்டினார். இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி கொத்தாலாவல பாதுகாப்பு கல்லூரியின் பீடாதிபதி ஜீ.எப்.டி.சில்வா உள்ளிட்ட பலர் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.