பிரேஸிலின் றியோடிஜெனிரோ நகரத்தின் வடபகுதியில் உள்ள மலைப்பாங்கான பிரதேசத்திலுள்ள நகரத்தில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்குண்டு சுமார் 94 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ச்சியாக 3 மணித்தியாலங்கள் வரை பெய்த அடை மழையை அடுத்தே மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மோட்டார் வாகனங்கள், வீடுகள் என பொதுமக்களின் உடமைகள் பல மண்ணில் புதையுண்டுள்ளன. மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் தொடர்ந்தும் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிராந்திய ஆளுநரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பொதுமக்களும், படையினரும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 400 பேர் வரை வீடுகளை இழந்;துள்ளதாகவும், இடிபாடுக்குள் மேலும் சடலங்கள் இருக்கலாமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்தபகுதி யுத்த பூமியை போன்று காட்சியளிப்பதாகவும் றியோடிஜெனிரோ ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். பெரும் எண்ணிக்கையிலானோர் காணாமல் போயுள்ளதாகவும், 24 பேர் வரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை பிரேஸில் ஜனாதிபதி ரஷ்யாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.