கனிய எண்ணெய் கொள்வனவுக்காக இலங்கை அரசாங்கத்திற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை குறுகியகால கடன் அடிப்படையில் பெற்றுக்கொடுப்பதற்கான ஒப்பந்தமொன்று கைச்சாதிடப்பட்டுள்ளது. நிதி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் எஸ்.ஆர்.ஆட்டிகல இந்தியா அரசாங்கம் சார்பில், இந்தியன் எக்ஸின் வங்கியில் பிரதான பொதுமுகாமையாளர் கௌரவ் பண்டாரி ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச்சாதிட்டுள்ளனர். நிதி அமைச்சில் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்த்லே ஆகியோருடன் பங்கேற்புடன் ஒப்பந்தம் கைச்சாதிடும் நிகழ்வு இடம்பெற்றது. நிதி அமைச்சர் கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டதன் பயனாக குறித்த கடன் உதவி கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்நிலையில் குறித்த விஜயத்தின் போது எரிசக்தி பாதுகாப்பு தொடர்பில் இரு நாடுகளுக்குமிடையில் தொடர்புகளை வலுப்படுத்துவது குறித்து நடவடிக்கைகள் முன்னெடுக்க்பட்டன. இலங்கையுடன் நீண்ட நட்புறவை கொண்டுள்ள இந்தியா 1973ம் ஆண்டு இலங்கைக்கு முதலாவது கடன் தொகையை பெற்றுக்கொடுத்தது. பொருளாதார அபிவிருத்தி, வாழ்க்தை தரத்தை மேம்படுத்துதல், கல்வி, சுகாதார துறைகளை போன்று தொழிற்நுட்ப அறிவை மேம்படுத்துவதற்கு இந்தியா தொடர்ச்சியாக இலங்கைக்கு தனது உதவி கரத்தை வழங்கி வருகின்றது. உள்ளுர் செலவாணி சந்தையில் டொலருக்கான நெருக்கடி நிலை ஏற்பட்டபோதும், இந்தியா இலங்கைக்கான ஒத்துழைப்பை வழங்கியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.