ரயில் கட்டுப்பாட்டாளர்கள் சிலருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து ரயில் சேவைகள் சில இரத்து செய்யப்பட்டுள்ளன. மருதானை ரயில் நிலைய கட்டுப்பாட்டாளர்கள் ஐவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் தொடர்பாளர்களாக 14 பேர் காணப்படுகின்றனர்.
அத்துடன் மாத்தறை, சிலாபம், பொல்கஹவெல, மஹவ, கண்டி, நாவலப்பிட்டி, அனுராதபுரம், மட்டக்களப்பு மற்றும் அளுத்கம ஆகிய ரயில் நிலையங்களுக்கு இணைவாக செயற்படும் கட்டுப்பாட்டளார்கள் சிலருக்கும் கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜெயசுந்தர குறிப்பிட்டார்.
இதனால் விசேடமாக கொழும்பு வலயத்தில் சேவையிலுள்ள ரயில்களுக்கென கட்டுப்பாட்டாளர்களை சேவையில் ஈடுபடுத்த முடியாததால் பிரதான மார்க்கத்துடனான 6 ரயில்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. கரையோர ரயில் மார்க்கத்தில் இரு ரயில்களும், புத்தளம் ரயில் மார்க்கத்தில் 3 ரயில்களும், களனி வெளி ரயில் மார்க்கத்திலும் இரு ரயில்களும் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை வடக்கிற்கான ரயில் சேவையில் குருநாகல் வரை பயணிக்கும் ரயில் உட்பட 14 ரயில்கள் இன்றையதினம் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.