சுகாதார தொழிற்துறை சம்மேளனத்தினர் ஒருநாள் பணிப்பகிஸ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர். அதன் காரணமாக வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளர்கள் பெறும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். தாதியர்கள், துணை மற்றும் நிரப்பு மருத்துவ சேவையாளர்கள் உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து மேல் மாகாணத்தில் குறித்த தொழிற்சங்க நடவடிக்கைகளை இன்றைய தினம் முன்னெடுத்துள்ளனர்.
இன்று காலை 7.00 மணியிலிருந்து இரவு 7.00 மணி வரை தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. பொதுசுகாதார பரிசோதகர்கள், குடும்ப சுகாதார அதிகாரிகள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலக ஊழியர்களும் பணிப்பகிஸ்கரிப்பில் ஒன்றிணைந்துள்ளனர். பணிப்பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டாலும், அத்தியாவசிய மருத்துவ சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. கொழும்பு தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட ஒரு சில வைத்தியசாலைகளில் செயற்பாடுகள் வழமைபோன்று முன்னெடுக்கப்படுகின்றன.
எனினும் வெளிநோயாளர் பிரிவு தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கான செயற்பாடு ஆகியவற்றில் அசௌகரியங்கள் காணப்படுவதாக நோயாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சுகாதார துறையினரின் பணிப்பகிஸ்கரிப்பின் பின்னணியில் அரசியல் காரணங்களே பெறும்பாலும் உள்ளடங்கியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.