புர்கினோபாசோவில் அந்நாட்டு இராணுவத்தினர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளனர். ஜனாதிபதி ரோச் கபோரே கைதுசெய்யப்பட்டு அரசாங்கம் கலைக்கப்பட்டுள்ளதோடு, அந்நாட்டு பாராளுமன்ற செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், அரசியல் அமைப்பு இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் புர்கினோபாசோவின் இராணுவம் அறிவித்துள்ளது. அந்நாட்டின் தேசிய தொலைக்காட்சியில் இராணுவ உயர் அதிகாரிகள் கலந்துக்கொண்டு அதுதொடர்பான அறிவிப்பை நாட்டு மக்களுக்கு வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே ஜனாதிபதி மாளிகைக்கு அருகாமையில் துப்பாக்கி பிரயோகங்கள் இடம்பெற்ற நிலையில் அதுதொடர்பான செய்திகள் வெளியாகியிருந்தன. ஜனாதிபதி பாதுகாப்பான இடம் ஒன்றில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டின் எல்லைகள் மூடப்பட்டுள்ளதாகவும் புர்கினோபாசோவின் இராணுவத்தின் லெப்டினன் கேர்னல் போல் ஹென்ரி சென்டாகோ டமியா அறிவித்துள்ளார்.
இந்நிலையில் புர்கினோபாசோவின் தற்போதைய நிலை தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்செயலாளர் என்டோனியோ குட்ரெஸ் கண்டனம் வெளியிட்டுள்ளார். இராணுவத்தினர் சதிப்புரட்சியின் ஊடாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளமையை வன்மையாக கண்டிப்பதாக அறிக்கை ஒன்றின் ஊடாக குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் மீண்டும் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்கான நடைமுறைகள் குறித்து கூடுதல் அவதானத்துடன் இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.