இன்று நள்ளிரவின் பின்னர் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்கள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் என்பவற்றை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புலமைப்பரிசில் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பரீட்சைக்கு தோற்ற வுள்ள மாணவர்கள் எவராவது கொவிட் தொற்றுக்க உட்பட்டிருந்தால் அவர்களுக்கு பிரத்தியேக மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 22ம் திகதி ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை 2 ஆயிரத்து 943 மத்திய நிலையங்களில் நடைப்பெறவுள்ளது. சிங்கள மொழி மூலம் 2 இலட்சத்து 50 ஆயிரத்து 62 பேர் தோற்றவுள்ளனர். தமிழ் மொழி மூலம் 85 ஆயிரத்து 446 பேர் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்றைய தினம் நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புக்களை நடத்துவது, அதற்காக ஒருங்கமைப்புக்களை மேற்கொள்வது, செயலமர்வுகள், கருத்தரங்குகளை ஒழுங்கு செய்தல், மாதிரி வினாத்தாள்களை அச்சிடுதல், விநியோகித்தல் மற்றும் ஒன்லைன் மூலமான கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.