ஹொரண மில்லேவ மருந்து உற்பத்தி வலயத்திற்கென 65 ஏக்கர் நிலப்பகுதி 99 வருட குத்தகை அடிப்படையில் அரச ஒளடத கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. குறித்த கூட்டுத்தாபனம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கிடையில் ஒப்பந்தமொன்றும் கைச்சாதிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான நிகழ்வு நகர அபிவிருத்தி அதிகார சபையில் இடம்பெற்றது.
அரச ஒளடத கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் உத்பல இந்திரவங்ஷ, மருந்து உற்பத்தி விநியோகம் மற்றும் ஒழுங்குப்படுத்தல் இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் ஷம்மி குமாரி தெஹிவத்த, நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஓய்வுப்பெற்ற மேஜர் ஜெனரல் உதய நாணயக்கார மற்றும் அதன் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச்சாதிட்டுள்ளனர். அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இராஜாங்க அமைச்சர்களான ச்சன்ன ஜயசுமன மற்றும் நாலக்க கொடகேவா ஆகியோரும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
குறித்த மருந்து உற்பத்தி வலயத்திற்கான மொத்த முதலீடு சுமார் 10 பில்லியன் ரூபாவாகும். மருந்து உற்பத்தி தொழிற்சாலைகள் 3 நிர்மாணிக்கப்படவுள்ளதோடு, 2 வருடங்களுக்குள் இதற்கான தொழிற்சாலைகள் இரண்டையும் நிர்மாணிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. ஏனைய தொழிற்சாலைகளை 3 மாதங்களில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் நிர்மாணப்பணிகள் நிறைவு செய்யப்பட்டதையடுத்து, நாட்டின் மொத்த மருந்து மற்றும் வைத்திய உபகரணங்களின் தேவை குறிப்பிடத்தக்களவு உற்பத்தியை மேற்கொள்ள முடியுமென்பது குறிப்பிடத்தக்கது.