பிரபல பின்னணி பாடகரும், திரைப்பட நடிகருமான மாணிக்க விநாயகம் மாரடைப்பால் நேற்றிரவு காலமானார். கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், நேற்றைய தினம் அவரது வீட்டில் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இறக்கும் போது அவரது வயது 78. அவரது மறைவுக்கு திரையுலகை சேர்ந்தவர்கள், அரசியல்வாதிகள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ் மாத்திரமின்றி பிற தென்னிந்திய மொழி திரைப்படங்களிலும் பாடல்களை பாடியுள்ள மாணிக்க விநாயகம் தமிழ் படங்களில் குணச்சித்திர நடிகருமாக நடித்துள்ளார்.
இதுவரை 800க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை பாடியுள்ள அவர், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தி பாடல்கள் மற்றும் நாட்டுப்புற பாடல்களை பாடி தன் குரல் வளத்தால் அதிகளவானோரை கவர்ந்துள்ளார். பெயரை போலவே பண்பிலும் மாணிக்கமாக ஒளிர்ந்த மாணிக்க விநாயகத்தின் மறைவு கலையுலகத்துக்கு பாரிய இழப்பாகும்.