புகையிரத பொதுமுகாமையாளர்களுடன் இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தை வெற்றியளிக்கும்பட்சத்தில் பணிப்புறக்கணிப்பை கைவிடவுள்ளதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த பேச்சுவார்த்தை ரயில் பொதுமுகாமையாளர் மற்றும் தொழிற்சங்கங்களுக்கிடையில் புகையிரத தலைமையகத்தில் இன்று காலை ஆரம்பமானது.
எவ்வாறெனினும் ரயில் தொழிற்சங்கம் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பால் தபால் போக்குவரத்து வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் தபால் திணைக்களத்திற்கு பாரிய நிதி நட்டம் ஏற்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க ஒன்றியத்தின் அழைப்பாளர் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார்.
தமது தொழில்களுக்குரிய பதவியுயர்வு மற்றும் ஆட்சேர்க்கை இடம்பெறாமை, உரிய முறையில் ரயில் போக்குவரத்து இடம்பெறாமை, சமிக்ஞை கட்டமைப்பு பிரச்சினை உள்ளிட்ட 25 கோரிக்கைகளை முன்னிறுத்தி, ரயில் தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தன.
அத்துடன் ரயில் டிக்கட்டுக்கள் விநியோகிக்கப்படாத நிலையில், பொதிகளை பொறுப்பேற்கும் நடவடிக்கைகளும் கைவிடப்பட்டிருந்தன. புகையிரத பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தரவுடன், ரயில் தொழிற்சங்கத்தின் கோரிக்கைகள் தொடர்பில் நடத்தப்படும் பேச்சுவார்த்தையில் அனைத்து விதமான தொழிற்சங்க நடவடிக்கைகளையும் தற்காலிகமாக கைவிடுவதாக புகையிரத தொழிற்சங்கம் தெரிவித்தது. அதன் அடிப்படையில் இன்று காலை ரயில் தலைமையகத்தில் பேச்சுவார்த்தை ஆரம்பமானது.
இதேவேளை இன்று காலையும் ரயில் பயணச்சீட்டு விநியோகம் மற்றும் பொதிகளை பொறுப்பேற்கும் நடவடிக்கைகள் இடம்பெறவில்லை. விடுமுறை காலத்தை முன்னிட்டு அதிகளவானோர் ரயில்களில் பயணிப்பதற்கென வருகை தருவதை காணக்கூடியதாக உள்ளதென எமது செய்தியாளர் தெரிவித்தார்.