இன்று முதல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் மீள ஆரம்பிக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட எரிவாயு கப்பலொன்றில் அடங்கியுள்ள எல்.பி கேஸிற்கு பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை மற்றும் இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கிணைவாகவே எரிவாயு விநியோகம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது. மேலும் இரு எரிவாயு கப்பல்கள் கெரவலப்பிட்டி லிட்ரோ கேஸ் முனையத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள நிலையில், அதில் அடங்கியுள்ள எரிவாயு தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை மற்றும் இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் அனுமதி எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
லிட்ரோ நிறுவனம் கடந்த 6ம் திகதி இறக்குமதி செய்த எரிவாயு தொகை களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த கப்பலில் இருந்து அதனை தரைக்கு கொண்டுவர தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் ஜெயந்த டி சில்வா அனுமதி வழங்கியுள்ளார். கடந்த 6ம் திகதி லிட்ரோ நிறுவனம் இறக்குமதி செய்த கேஸ் கப்பல் நாட்டை வந்தடைந்தது. கேஸில் அடங்கியுள்ள ப்ரோப்பேன் மற்றும் ப்யூடென் கலவையின் தரம் தொடர்பில் பிரச்சினைகள் ஏற்படவில்லை. எனினும் எரிவாயுவின் மணத்தை கண்டறிவதற்கென பயன்படுத்தப்படும் எதில் மெர்கெப்டனில் பிரச்சினைகள் காணப்படுவதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை மூலம் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, அதனை தரையிறக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன்காரணமாக சுமார் 11 தினங்களாக குறித்த கப்பல் இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டிருந்தது. நேற்றைய தினம் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா உள்ளிட்ட குழுவினர் கப்பலுக்கு சென்று பரிசோதனைகளை மேற்கொண்டனர். அதனையடுத்து எரிவாயுவை தரையிறக்க அனுமதி வழங்கப்பட்டது. கப்பில் காணப்படும் எரிவாயு உரிய தரத்தை கொண்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்டது. இதனிடையே கடந்த திங்கட்கிழமை நாட்டை வந்தடைந்த லிட்ரோ நிறுவனத்திற்குரிய இரண்டாவது எரிவாயு கப்பலில் உள்ள எரிவாயுவின் தரம் தொடர்பில் தொடர்ந்தும் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டில் நேற்றைய தினமும் பல்வேறு பிரதேசங்களில் எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. கொட்டகலை பத்தனை கிறேக்கிலி தோட்டப்பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்றிரவு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதாக பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் கொட்டகலை ஸ்மோல்ரேடன் பகுதியிலும் இவ்வாறு வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இதேவேளை லிட்ரோ நிறுவனத்தை பாதுகாக்கும் அமைப்பானது நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அணில் கொஸ்வத்தவிற்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று முறைப்பாடொன்றை முன்வைத்தது. 18 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் தொடர்பில் முறைப்பாடு முன்வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.