லிட்ரோ கேஸ் நிறுவனம் அண்மையில் நாட்டுக்கு இறக்குமதி செய்த எரிவாயு தொகையை தரையிறக்குவதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானமிக்க கலந்துரையாடலொன்று இன்று இடம்பெறவுள்ளது.
லிட்ரோ நிறுவனத்திற்கு சொந்தமான 3 ஆயிரத்து 700 மெற்றிக் தொன் எரிவாயு அடங்கிய கப்பல் அண்மையில் நாட்டை வந்தடைந்தது. குறித்த எரிவாயு தொகையை தரையிறக்குவதற்கு முன்னர் கப்பலுக்கு சென்று அதன் தரம் தொடர்பில் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இறக்குமதி செய்யப்பட்ட குறித்த எரிவாயு தொகையின் மனத்தை கண்டறியும் இரசாயனமான எத்தில் மெர்கெப்டனை பயன்படுத்தி சோதனை நடத்தப்பட்டது. அதற்கமைய எரிவாயுவை தரையிறக்குவது தொடர்பில் இன்று கூடவுள்ள தொழில்நுட்ப குழுவில் தீர்மானம் பெறப்படவுள்ளது. கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள குறித்த கப்பலில் உள்ள எரிவாயுவை தரையிறக்குவது தொடர்பான தீர்மானம் இன்று பெறப்படுமென பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை ஏற்கனவே தெரிவித்திருந்தது.
எவ்வாறெனினும் எரிவாயு சிலிண்டரில் அடங்கியுள்ள புரோப்பேன் மற்றும் ப்யூட்டென் கலவையின் தரம் உரிய முறையில் காணப்படுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டாலும் சில எரிவாயுவின் மணத்தை அறிந்துக்கொள்ள பயன்படுத்தப்படும் மெர்கெப்டன் கலவை சம அளவில் உள்ளதா என்பது தொடர்பில் இன்னும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. குறித்த கப்பலில் உள்ள எரிவாயு கலவையின் அளவில் சிறு வித்தியாசம் காணப்பட்டாலும் அதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அனுமதி வழங்கப்படமாட்டாதென அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை எரிவாயு தொடர்பான வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் கண்டறிந்து, அதற்கு துரித தீர்வை முன்வைக்க ஜனாதிபதி நியமித்த குழுவின் அறிக்கை தயாரிக்கும் பணிகள் நிறைவு கட்டத்தை அடைந்துள்ளதாக குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். நாளைய தினம் அறிக்கை தயாரிப்பு பணிகள் நிறைவடையுமென அதன் தலைவரும், மொரட்டுவ பல்கலைகழக பேராசிரியருமான ஷாந்த வல்பொலகே தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கை நாடு திரும்பியதன் பின்னர் வழங்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.