மியன்மாரின் முன்னாள் தலைவர் ஆவுன் சான் சூகியின் 4 வருட சிறைத்தண்டனையை 2 வருடங்களாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமைதி மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் அவர் குற்றவாளியாக தீர்க்கப்பட்டு தண்டனை அறிவிக்கப்பட்டது. ஆங் சான் சூச்சிக்கு எதிராக 11 குற்றச்சாட்டுக்களின் கீழ் அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணைகள் இடம்பெறுகின்றன.
அதன் முதற்கட்டத்தின் கீழ் இடம்பெற்ற வழக்கு விசாரணையில் அவர் அமைதி மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் குற்றாவளியாக நீதிமன்றத்தினால் நேற்று அறிவிக்கப்பட்டார்.
குறித்த குற்றச்சாட்டுக்கமைய அவருக்கு 4 வருட சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எவ்வாறெனினும் குறித்த சிறைதண்டனையை 2 வருடங்களாக குறைக்க மியன்மார் இராணுவ ஆட்சியாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதேவேளை அவருக்கு எதிராக கிடைக்கப்பெற்ற தீர்ப்பு தொடர்பில் சர்வதேச சமூகம் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் குறித்த தீர்ப்பு வெட்கக்கேடானதொன்றென ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு பிரதானி மிச்சேல் பெச்லே அறிக்கையொன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளார். மியன்மாரில் காணப்படும் நெருக்கடி நிலை மேலும் உக்கிரமடைவதற்கு இது காரணமாக அமையக்கூடுமென அவர் எச்சரித்துள்ளார்.