சமையல் எரிவாயு சம்மந்தமான தீப்பற்றல் மற்றும் வெடித்தல் போன்ற சம்பவங்கள் குறித்து விசாரிப்பதற்கும் தீர்வை பெற்றுக் கொள்ளவும் ஜனாதிபதி நியமித்த குழு தற்போது தமது கடமைகளை ஆரம்பித்துள்ளது. அதன் முதல்கட்டமாக சம்பவங்கள் இடம்பெற்ற இடங்களை குழு உறுப்பினர்கள் பார்வையிட்டனர். இதேநேரம் எரிவாயு சிலிண்டர்களை தருவிப்பதற்கு முன்னர் கப்பல்களிலேயே பரிசோதனைகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன.
சர்ச்சைக்குரிய எரிவாயு சிலிண்டர்கள் நாட்டிற்குள் எடுத்துவரப்படுவதை தடுப்பதற்காகவே கப்பல்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறித்த பரிசோதனைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டதாக ராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண தெரிவித்தார்.
இதேநேரம் எரிவாயு சிலிண்டர்கள் தீப்பறிக் கொள்வது தொடர்பா கண்டறிய நியமிக்கப்பட்ட குழுவின் முதலாவது கூட்டம் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்றதாக குழுவின் தலைவர் பேராசிரியர் சாந்த வல்பொலகே தெரிவித்தார். அந்த குழு உறுப்பினர்கள் எரிவாயு தொடர்பான வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற இடங்களை பார்வையிடச்சென்றனர். கொட்டாவ , அத்துருகிரிய , கடுவெல ஆகிய பகுதிகளுக்கு இவர்கள் சென்றனர். பொலிசாரும் இவர்களுக்கு உதவியளித்தனர்.
இதேநேரம் இன்றைய தினம் பல பகுதிகளில் எரிவாயு அடுப்பக்கள் வெடித்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. மீரிகம வெல்லம்பிட்டி, கொட்டாவ ஆகிய பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அரசியல் மேடைகளிலும் இதுதொடர்பாக இன்று கருத்து தெரிவிக்கப்பட்டன.
கொட்டாவ வித்தியாலய சந்தி வீடொன்றுக்கு இன்று காலை எடுத்துச் செல்லப்பட்ட எரிவாயு சிலிண்டரில் கசிவு இடம்பெறுவதாக வீட்டு உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பின்னர் அந்த எரிவாயு சிலிண்டர் வீட்டிற்கு வெளியே எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.