நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்பாடுகள் இன்றுமுதல் வழமைக்கு திரும்பியுள்ளன. மரக்கறி தொகைகள் கிடைக்கப்பெறாதமையால் நுவரெலிய விவசாயிகள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியமையால் நுவரெலிய பொருளாதார மத்திய நிலையம் கடந்த தினங்களில் மூடப்பட்டிருந்தன.
இந்நிலையில் மீண்டும் பொருளாதார மத்திய நிலையம் திறக்கப்பட்டுள்ளது. அங்கு மொத்த, சில்லரை விலை நூற்றுக்கு 20 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை விசேட பொருளாதார மத்திய நிலைய ஒன்றியத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். தற்காலிகமாக பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டிருந்தமை மற்றும் மரக்கறிகள் கிடைப்பதில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தமையே இதற்கு காரணமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் இன்றைய தினம் மரக்கறிகளின் விலை நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் சற்று குறைவடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் மரக்கறிகளை கொள்வனவு செய்வதற்கு வருகைதரும் மொத்த வியாபாரிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்பட்டதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.