டுவண்டி டுவண்டி உலக கிண்ண தொடரின் 2வது அரையிறுதிப்போட்டி இன்று இடம்பெறவுள்ளது. அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் போட்டி இரவு 7.30 மணியளவில் டுபாயில் நடைப்பெறவுள்ளது. இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு நுழையும் எதிர்பார்ப்பில் களமிறங்கவுள்ளன.
ஏற்கனவே நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ள நிலையில் நியூசிலாந்தை எதிர்கொள்ளப்போகும் அணி எது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இதேவேளை ஐசிசியின் நொக்கவுட் போட்டிகளில் பாகிஸ்தானிடம் அவுஸ்திரேலியா இதுவரை தோல்விகளை சந்தித்ததில்லை. எனினும் பாகிஸ்தான் அணியினர் பாபர் அஷாம் தலைமையில் சிறந்த மனோபலத்துடன் செயற்பட்டுவருகின்றனர்.
அரோன் பின்ச் தலைமையில் அவுஸ்திரேலியா அணியினர் உலக கிண்ண தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னர் பல்வேறு தடுமாற்றங்களுக்கு மத்தியிலேயே தொடரை எதிர்கொண்டனர். எனினும் அரையிறுதி வரை அவுஸ்திரேலியா அணி முன்னேறியுள்ளது. இரு அணிகளும் இதுவரை டி டுவண்டி போட்டிகளை பொருத்தமட்டில் 23 போட்டிகளில் ஒன்றை ஒன்று எதிர்கொண்டுள்ள நிலையில் பாகிஸ்தான் அணி அவற்றில் 12 போட்டிகளில் வெற்றியீட்டியுள்ளது. 9 போட்டிகளிளேயே அவுஸ்திரேலியா வெற்றிக்கொண்டுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு எமீரேட்ஸில் இடம்பெற்ற 16 டி டுவண்டி போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றியீட்டியுள்ளது. இறுதியாக 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக சுப்பர் ஓவரிலேயே தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டி ரசிகர்களுக்கு இறுதி வரை சுவாரஸ்யமிக்க போட்டியாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.