டி – டுவண்டி உலகக்கிண்ணத்தொடரின் 29வது போட்டியில் இங்கிலாந்து அணி 26 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டி இலங்கை அணிக்கு எதிராக சார்ஜாவில் இடம்பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து 163 ஓட்டங்களை பெற்றது. ஜோஸ் பட்லர் ஆட்டமிழக்காமல் 101 ஓட்டங்களை பெற்று சதம் கடந்தார். அணி தலைவர் ஒயின் மோகன் 40 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சில் வனிந்து அசரங்க 3 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.
இந்நிலையில் 164 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 137 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. வனிந்து அசரங்க 34 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததோடு, பானுக்க ராஜபக்ஷ மற்றும் அணித்தலைவர் தஸூன் ஷானக்க ஆகியோர் தலா 26 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர். இங்கிலாந்து பந்து வீச்சில் மொயின் அலி, ஆதில் ரஷீட், க்ரிஷ் ஜோர்டன் ஆகியோர் இரண்டு விக்கட்டுக்களை கைப்பற்றினர். போட்டியின் ஆட்டநாயகனாக ஜொஸ் பட்லர் தெரிவானார்.