கடந்த ஒன்றரை வருடங்களாக வீட்டிற்குள் முடங்கியிருந்த பிள்ளைகளில் ஒரு தொகுதியினர் இன்று தமது பாடசாலை வாழ்க்கையை மீள ஆரம்பித்தனர். கொவிட் காரணமாக பல சந்தர்ப்பங்களில் பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் இறுதியாக கடந்த ஏப்ரல் 23 ம் திகதி பாடசாலை மூடப்பட்டது. அநேக பாடசாலைகளில் இன்றைய தினம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை உயர் மட்டத்தில் காணப்பட்டது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாடசாலைகளை மூடவேண்டி ஏற்பட்ட நிலையில் ஒன்லைன் கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பல மாதங்களாக ஒன்லைன் கல்வி செயற்பாடுகளும் நிறுத்தப்பட்டிருந்தன. ஆசிரியர்கள் ஒன்லைன் கல்வி செயற்பாடுகளை கைவிட்டிருந்தமையே இதற்கு காரணமாகும். அரசாங்கம் அவர்களின் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் அதேவேளை சுகாதார பரிந்துரைகளுக்கு அமைய 200 மாணவர்களுக்கும் குறைவான பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
அதற்கமைவாகவே இன்றைய தினம் 200 மாணவர்களுக்கும் குறைந்த பாடசாலைகள் திறக்கப்பட்டன. எவ்வாறெனினும் இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவிக்கையில் இன்றைய தினம் பாடசாலைக்கு செல்லாது எதிர்வரும் 25 ம் திகதி முதலே சேவைக்கு செல்லவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
எனினும் அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டை நீக்குவதற்கான ஒன்றிணைந்த கூட்டமைப்பு கருத்து வெளியிடுகையில் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக சில ஆசிரிய சங்கங்கள் செயற்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த ஒன்றரை மாதங்களாக சகல சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளும் சரியாக முன்னெடுக்கப்பட்டே இன்று பாடசாலை திறக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது. போக்குவரத்து பிரிவினருக்கு பெற்றோருக்கு ஆலோசனைகளை வழங்குதல் சிறுவர் நோய் தொடர்பான வைத்திய நிபுணர்களின் கண்காணிப்பு ஆகிய விடயங்களும் இதில் உள்ளடங்குவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.
தேவை ஏற்படின் சிறுவர் நோய் தொடர்பான வைத்திய நிபுணர்கள் 100 கல்வி வலயங்களிலும் தாமாகவே முன்வந்து சேவை வழங்க தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நீண்ட நாட்களில் பின்னர் இன்று பாடசாலைக்கு வருகை தரும் பிள்ளைகளுக்கென பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. அவர்களின் மனதை மீண்டும் பாடசாலை வாழ்க்கைக்குள் கொண்டு வரும் நோக்கில் இவ்வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
மேல் மாகாணத்தில் பிலியந்தலை கல்வி வலயத்தில் 200 மாணவர்களுக்கும் குறைவான 31 பாடசாலைகள் திறக்கப்பட்டதாகவும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை உயர்மட்டத்தில் உள்ளதாகவும் கல்வி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
முல்லேரியா , அம்பத்தலே டிகிரி குமாரு கனிஷ்ட வித்தியாலயம் இன்று திறக்கப்பட்டது.
குருநாகல் மாவட்டத்திலும் 200 மாணவர்களுக்கும் குறைந்த பாடசாலைகள் இன்று திறக்கப்பட்டதை அடுத்து அதிபர் ஆசிரியர்களும் மாணவர்களும் அக்கறையுடன் பாடசாலைக்கு வருவதை காணக்கூடியதாக இருந்தது.
ஹோமாகம கல்வி வலயத்திற்கு உட்பட்ட தீபங்கொட கனிஷ்ட வித்தியாலயத்தின் சகல ஆசிரியர்களும் இன்றைய தினம் சேவைக்கு வருகை தந்தமை விசேட அம்சமாகும். மாணவர்களும் அதிகளவில் இன்று பாடசாலைக்கு வருகை தந்தனர்.
ஹட்டன் கல்வி வலயத்திலுள்ள 200 மாணவர்களுக்கும் குறைந்த தமிழ் சிங்கள மொழி மூல 74 பாடசாலைகளில் அனேக பாடசாலைகள் இன்று திறக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் ஆசிரியர்கள் வருகை குறிப்பிட்ட மட்டத்தில் காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் 200 மாணவர்களுக்கும் குறைந்த 568 பாடசாலைகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டதாக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரிபுள்ளை நாயகம் தெரிவித்தார். அதற்கமைய மட்டக்களப்பில் 200 மாணவர்களுக்கும் குறைந்த பாடசாலைகள் இன்று திறக்கப்பட்டதை அடுத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்வத்துடன் பாடசாலைக்கு வருகை தருவதை காணக்கூடியதாக இருந்தது.