ஏதேனுமொரு விசேட சந்தர்ப்பங்களின்போது எந்தவொரு நபருக்கும் தனது உருவத்துடன் கூடிய முத்திரையை அச்சிடுவதற்கான சந்தர்ப்பம் தபால் திணைக்களத்தினூடாக ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச தபால் தினத்தை முன்னிட்டு குறித்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித்த ரணசிங்க தெரிவித்தார். பிறந்தநாள் நிகழ்வு, திருமண நிகழ்வு அல்லது நிறுவன நிகழ்வுகளை மையப்படுத்தி தனிநபர் முத்திரைகளை அச்சிட்டுக்கொள்ள முடியும். இலங்கை தபால் திணைக்களத்திற்கு விண்ணப்பித்து அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள முடியும். குறித்த முத்திரைக்கான பெறுமதி 20 ரூபாவாகும். 20 முத்திரைகளை கொண்ட தொகுதியொன்றை இரண்டாயிரம் ரூபாவுக்கு பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் குறித்த முத்திரைகளை இலங்கைக்குள் தபாலிடுவதற்கும் பயன்படுத்த முடியும்.
இதேவேளை முத்திரையுடன் விசேட தபாலுறையும் வழங்கப்படும். கொழும்பு டீ.ஆர்.விஜேவர்தன மாவத்தையிலுள்ள தபால் தலைமையகத்தில் முத்திரை பணியகம் அமைந்துள்ளது. கண்டி, நீர்க்கொழும்பு, நுவரெலியா தபால் நிலையங்களிலும் கிளை முத்திரை பணியகங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. QR குறியீட்டுடன் முத்திரைகள் வெளியிடப்படுவதால், அது நிலையாக தபால் திணைக்களத்தின் இணையத்தளத்தில் பதிவுசெய்யப்படும். எந்தவொரு நபருக்கும் www.mystamp.lk எனும் இணைய முகவரிக்குள் பிரவேசித்து, தமது விபரங்களை உள்ளடக்கி முத்திரை தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள முடியும்.