12 வயது முதல் 19 வயதிற்கிடைப்பட்ட பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் பைசர் தடுப்பூசி வழங்கப்படுமென இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்த்ர சில்வா தெரிவித்துள்ளார். இதுதொடர்பான நடவடிக்கை விசேட வைத்திய நிபுணர்களின் கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்கப்படும்.
இலங்கைக்கு இதுவரை 3 கோடியே 15 இலட்சத்து 56 ஆயிரத்து 44 தடுப்பூசிகள் எடுத்துவரப்பட்டுள்ளன. ஒரு கோடியே 12 இலட்சத்து 3 ஆயிரத்து 934 பேருக்கு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் வழங்கப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கொவிட் ஒழிப்பு செயலணி கூட்டத்தின்போது 12 முதல் 19 வயதிற்கிடைப்பட்டவர்களில் நாற்பட்ட நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது குறித்து பரிந்துரைக்கப்பட்டது. அதற்கமைய நேற்றைய தினம் குறித்த வயதுடைய தரப்பினரில், நாற்ப்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதியினால் ஆலோசனை வழங்கப்பட்டது. அதனடிப்படையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் உள்ள நாற்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டுள்ள 12 முதல் 19 வயதிற்கிடைப்பட்ட சிறுவர்களுக்கு, அவர்களின் வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்ளும் விசேட வைத்திய நிபுணர்களின் ஆலோசனையின் கீழ் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்த்ர சில்வா தெரிவித்தார்.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் விசேட தேவையுடைய நபர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடமாடும் வேலைத்திட்டம் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இராணுவ தளபதியின் ஆலோசனைக்கமைய கிழக்கு மாகாண கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ச்சன்ன ஜயசூரியவின் கண்காணிப்பின் கீழ் 231ஆம் படைத்தளபதி கேர்ணல் திலூக்க பண்டார தலைமையில் இதுதொடர்பான நடவடிக்கை இடம்பெறுகிறது. விசேட தேவையுடையவர்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி வழங்கப்படுகின்றன.