இராஜாங்க அமைச்சர் அஜீத் நிவாட் கப்ரால் தனது இராஜாங்க அமைச்சு பதவி மற்றும் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இன்று இராஜினாமா செய்தார். அவரின் வெற்றிடத்திற்கு ஜயந்த கெட்டகொடவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்.
அஜீத் நிவாட் கப்ரால் தனது இராஜினாமா கடிதத்தை இன்றைய தினம் பாராளுமன்ற பொதுச் செயலாளரிடம் கையளித்துள்ளார். மத்திய வங்கியின் ஆளுநராக நியமனம் பெறவுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு இராஜினாமா செய்துள்ளார்.
அஜீத் நிவாட் கப்ரால் இதற்கு முன்னர் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக கடமையாற்றியுள்ளார். தற்போதைய மத்திய வங்கி ஆளுநர் பேராசிரியர் டப்ள்யு.டி.லக்ஷ்மன் தனது பதவியிலிருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளார். அவர் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி முதல் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக கடமையிலுள்ளார். அவர் நாட்டின் 15 வது மத்திய வங்கி ஆளுநராவார். அஜீத் நிவாட் கப்ரால் இவ்வாரத்தில் மத்திய வங்கி ஆளுநராக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
இதேவேளை அஜீத் நிவாட் கப்ரால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதால் ஏற்படும் வெற்றிடத்திற்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சாகர காரியவசம் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்டார்.
“ஏற்படும் வெற்றிடத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினத் பதவியிலிருந்து விலகிய ஜயந்த கெட்டகொடவை நியமிக்க கட்சி தீர்மானித்துள்ளது. அது தொடர்பிலான நடவடிக்கை எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும். எமது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில்இருக்கின்ற தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் நாட்டுக்காகவும் எமது கட்சிக்காகவும் எந்தவொரு அர்ப்பணிப்பையும் செய்வதற்கு எப்போதும் தயாராக உள்ளவர்கள் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கின்றேன்.”