வீட்டுப்பணியாளர்களது வயதை 18ஆக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வீட்டு பணியாளர்களாக தொழிலாற்றுவோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தொழிற்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன் தனியார் துறை ஊழியர்களின் ஆகக்குறைந்த சம்பளத்தை 12 ஆயிரத்து 500 ரூபாவாக அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள 3 ஆயிரத்து 500 ரூபா கொடுப்பனவு உள்ளடங்களாக அவர்களது மாத சம்பளம் 16 ஆயிரம் ரூபா வரை அதிகரிக்கும் என அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா குறிப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் பாராளுமன்றில் இடம்பெற்ற ஆகக் குறைந்த சம்பள சட்டம் திருத்தம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதேவேளை வாழ்க்கை செலவு தற்போது 21 வீதத்தால் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஊழியர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் பாதிப்புக்கள் ஏற்படுமாயின் அது தொடர்பில் விசேட சட்டங்களை கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என நிமல் ஸ்ரீ பால டி சில்வா மேலும் தெரிவித்தார்.