பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சம்பள முரண்பாட்டு பிரச்சினையை முன்னிறுத்தி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒன்லைன் கல்வி நடவடிக்கைகளில் இருந்து விலகி இன்றுடன் 25 தினங்கள் கடந்துள்ளன.
குறித்த பிர்ச்சினை தொடர்பில் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் சங்கங்கள் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தீர்வின்றி நிறைவடைந்த நிலையில் தொடர்ந்தும் வேலைநிறுத்த போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
இவ்வாறான நிலையில் நேற்றைய தினம் ஜனாதிபதி செயலக காரியாலயத்திற்கு முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 44 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களை சந்தித்த எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஆகியோர் இன்று முற்பகல் துறைமுக பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.
இதனிடையே தமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொழிற்சங்க போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். இதேவேளை கைதுசெய்யப்பட்ட 44 பேருக்கும் எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.