fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

றிஷாட்டின் வீட்டில் பணிபுரிந்த சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் தீவிர விசாரணை

ITN News Editor
By ITN News Editor ஜூலை 21, 2021 19:54

றிஷாட்டின் வீட்டில் பணிபுரிந்த சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் தீவிர விசாரணை

பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதினின் இல்லத்தில் பணிபுரிந்த 16 வயதான சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளுக்கமைய அவரின் தாய் மற்றும் சகோதரரிடம் இன்று இரண்டாவது நாளாக வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டது.

இந்த விசாரணைகளுக்கமைய றிஷாட் பதியுதினின் வீட்டில் பணிபுரிந்த மற்றுமொரு ஊழியரின் கையட்டக்தொலைபேசியை குற்றபுலனாய்வு திணைக்களத்திடம் பொரள்ளை பொலிஸார் கையளித்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதினின் வீட்டில் பணிபுரிந்த 16 வயதான சிறுமி தீக்காயங்களுக்குள்ளாகி கடந்த 15ஆம் திகதி உயிரிழந்தார். ஹட்டன் டயகம் மூன்றாம் பிரிவை சேர்ந்த இச்சிறுமி தராகர் ஒருவரின் ஊடாக றிஷாட் பதியுதினின் வீட்டிற்கு பணிப்பெண்ணாக அழைத்துவரப்பட்டுள்ளார். இச்சிறுமி நீண்டகாலமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டுள்ளதாக மரண பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுமியின் தாய் மற்றும் தந்தை ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து இவ்வாறு கருத்து வெளியிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைவாக கொழும்பு தெற்கு குற்றபுலனாய்வு பிரிவும், கொழும்பு தெற்கு சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் இரு குழுக்களாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். நேற்றைய தினம் இவ்விருக்குழுக்களும் உயிரிழந்த சிறுமியின் சொந்த ஊரான டயகம மூன்றாம் பிரிவு பகுதிக்கு செல்வதற்கு முன்னர் அவிசாவெள்ளை, புவக்பிட்டிய, கிரிவந்தல பகுதிக்கு சென்றனர். அங்கு குறித்த சிறுமி கல்வி கற்ற கிரிவந்தல தமிழ் வித்தியாலய அதிபர், உப அதிபர் மற்றும் ஏனைய இருவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டனர். இந்த அதிகாரிகள் குழுவினர் இன்றைய தினம் சிறுமியின் வசிப்பிடமான டயகம மூன்றாம் பிரிவு பகுதிக்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்தனர். இவ்விசாரணைகளின் ஒரு கட்டமாக சிறுமியின் தாய், தந்தை, சகோதரன் மற்றும் தரகர் ஆகியோரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளனர்.

குறித்த சிறுமி தங்கியிருந்ததாக கூறப்படும் றிஷாட் பதியுதினின் இல்லத்தில் உள்ள அறையொன்றில் இருந்து மண்ணெண்ணெய் மற்றும் லைட்டர் ஆகியவற்றை பொலிஸார் கண்டெடுத்தனர். அவை இரசாயன பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதேபோல் இந்த மண்ணெண்ணெயை குறித்த சிறுமி எவ்வாறு பெற்றுக்கொண்டார் என்பது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதினின் வீட்டில் பணிபுரிந்த நிலையில் தீக்காயங்களுக்குள்ளாகி மரணித்த டயகம சிறுமி தொடர்பான விடயத்தில் நியாயம் கிடைக்க வேண்டும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் வலியுறுத்தியுள்ளார். இன்றைய தினம் ஹட்டன் நகரில் டயகம சிறுமிக்கு நீதி வேண்டி முன்னெடுத்த கவனயீர்ப்பு போராட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்தார்;. பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.உதயகுமாரும் இதில் இணைந்திருந்தார்.

இதேவேளை தேசிய பௌத்த தகவல் மத்திய நிலையம், பொதுமக்கள் பொறுப்பு மத்திய நிலையம் எதிர்காலத்தில் நாங்கள் இளைஞர் அமைப்பு இலங்கை தாயின் மகள் அமைப்பு தேசப்பற்றுள்ள தேசிய அமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீனிற்கு எதிராக தீவிர விசாரணைகள் மேற்கொள்ளுமாறு குற்றபுலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதினின் வீட்டில் சிறுமி ஒருவர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு உயிரிழந்தமை தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியும், சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும் மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வீட்டு வேலை தொழிலாளர் சங்கம் எனும் அமைப்பு மட்டக்களப்பு தாண்டாவெளி சந்தியில் இவ்வார்;ப்பட்டத்தை முன்னெடுத்தது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 21, 2021 19:54

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க