நீண்டகாலம் அபிவிருத்தி செய்யப்படாத 100 நகரங்களை அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
நகர அபிவிருத்தி அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு குழுக்கூட்டத்தின் போதே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. பிரதான நகரங்களுக்கும் பிரதேச நகரங்களுக்குமிடையில் காணப்படும் அபிவிருத்தி ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதே திட்டத்தின் நோக்கமாகும். நகர அபிவிருத்தி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுள்ள 60 ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக 35 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. அதன் முன்னேற்றம் தொடர்பிலும் பிரதமர் கவனம் செலுத்தினார். திட்டத்தின் 50 வீத பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
கொலன்னாவை, டொரிங்டன், புளுமெண்டல், பேலியகொடை மற்றும் ஒருகொடவத்தை ஆகிய பகுதிகளிலும் கண்டி, குருணாகல், அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களிலும் மத்திய வர்க்கத்தினருக்கான வீடமைப்பு திட்டம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. நாட்டில் தற்போது காணப்படும் தேகப்பயிற்சி நடைபாதைகளுக்கு மேலதிகமாக 25 மாவட்டங்களிலும் புதிதாக 28 தேகப்பயிற்சி நடைபாதைகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கொழும்பு நகரில் உள்ள தொன்மையான கட்டிடங்களை மறுசீலமைப்பது தொடர்பிலும் பிரதமர் கவனம் செலுத்தினார்.
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்தில் ஏற்பட்ட பாதிப்புக்களுக்காகவும் சுற்றாடல் மற்றும் மீனவர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களுக்காகவும் உயர்ந்த பட்ச நட்டஈடு பெறப்பட வேண்டும் என பிரதமர் குறிப்பிட்டார். பாதிப்புக்களுக்காக 40 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டஈடாக கோரப்பட்டுள்ளது. 3.6 மில்லியன் அமெரிக்க டொலர் நட்ட ஈடு கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டது. இதேவேளை சமுத்திர சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையில் வேர்ல்ட் வீயூவ் நிறுவனமும் இணைந்து 25 ஆயிரம் ஹெக்டேயர் பகுதியில் சதுப்பு நில பூங்கா அமைக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளனர். இதுதொடர்பில் இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக்க கொடஹேவா, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், பிரதமர் செயலணியின் பிரதானி யோஷித்த ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதேவேளை சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் நெவில் ரஞ்சித் லமாஹேவாகே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார். யுத்தத்தின் போது சிறப்பாக செயற்பட்டமைக்காக ரணவிரு பதக்கம் மற்றும் ரணசூர பதக்கம் போன்றவற்றை அவர் 3 தடவைகள் பெற்றுள்ளார்.