சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுப்பதற்காக நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. பொலிஸ் சிறுவர் மற்றும் மகளீர் பிரிவு திட்டத்தை செயற்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட 15 வயது சிறுமி தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறித்த சிறுமி அவரது தந்தையால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது. சிறுமியை பாலியல் தேவைக்காக பயன்படுத்திய 41 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேபோன்று மற்றுமொரு சம்பவம் நேற்று முன்தினம் பதிவாகியுள்ளது. நாவலப்பிட்டிய பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகப்படுத்தபப்ட்டுள்ளார். சிறுமியின் தந்தை உட்பட நால்வர் நீண்டகாலமாக சிறுமியை துஷ்பிரயோகப்படுத்தியுள்ளனர். சந்தேகநபர்களும், மற்றுமொரு பெண்ணும் கைது செய்யப்பட்டு நாவலப்பிட்டிய நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அவர்களை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 6 பேர் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளன.
அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறான துஷ்பிரயோக சம்பவங்கள் நடப்பதற்கு முன்னர் தடுப்பதே பொலிஸாரின் இலக்காகும். இதனால் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விசேட செயலமர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நாடு பூராகவும் உள்ள பொலிஸ் நிலையங்களில் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவினரால் விழிப்புணர்வு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும். கிராமிய மற்றும் பாடசாலை மட்டத்தில் செயலமர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. குற்றம் நடைபெறும் முன்னர் தடுப்பதே இதன் நோக்கமாகும்.