இதுவரை கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் 40 இலட்சத்து 9 ஆயிரத்து 740 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் இரண்டாவது டோஸ் தடுப்பூசிகள் 14 இலட்சத்து 46 ஆயிரத்து 973 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. கொவிட் 19 தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் கொவிசீல்ட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் 9 இலட்சத்து 25 ஆயிரத்து 242 பேருக்கும் அதன் இரண்டாவது டோஸ் 3 இலட்சத்து 85 ஆயிரத்து 669 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது. சைனோபாம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் 29 இலட்சத்து 40 ஆயிரத்து 706 பேருக்கும் அதன் இரண்டாவது டோஸ் 10 இலட்சத்து 46 ஆயிரத்து 842 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஒரு இலட்சத்து 25 ஆயிரத்து 444 பேருக்கும் 14 ஆயிரத்து 464 பேருக்கு அதன் இரண்டாவது டோசும் வழங்கப்பட்டுள்ளது. பைசர் தடுப்பூசியின் முதலாவது டோஸ் மாத்திரம் 18 ஆயிரத்து 348 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவிக்கிறது.
அம்பகமுவ பொது சுகாதார வைத்திய உத்தியோகத்தர் பிரிவில் 2 ஆயிரத்து 606 பேருக்கு 2 வது டோஸ் தடுப்பூசிகள் இன்று வழங்கப்பட்டன. செனன் கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த 264 பேருக்கும் ஹட்டன் வடக்கு கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த 693 பேருக்கும் ஹட்டன் தெற்கு கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த 807 பேருக்கும் டிக் ஓயாவைச் சேர்ந்த 358 பேருக்கும் ஹட்டன் கிழக்கைச் சேர்ந்த 484 பேருக்கும் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் கே.காமதேவன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஏறாவூர் பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இதுவரை இரண்டாயிரத்து 800 வயோதிபர்களுக்கும் கள உத்தியோத்தர்களுக்கும் சைனோபாம் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய உத்தியோகத்தர் ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார். சைனோபாம் தடுப்பூசி வழங்கும் பணிகள் இன்று கித்துல் பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டன.