நாட்டில் நேற்றைய தினம் புதிய கொரோனா தொற்றாளர்களாக இரண்டாயிரத்து 849 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 83 ஆயிரத்து 442 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினத்தில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்த ஆயிரத்து 434 பேர் வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை மத்திய நிலையங்களிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், இதுவரை ஒரு இலட்சத்து 49 ஆயிரத்து 825 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். நேற்றைய தினத்தில் 36 கொரோனா மரணங்கள் தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தினால் உறுதிப்படுத்தப்பட்டு, அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் நாட்டில் பதிவாகியுள்ள மொத்த மரணங்களின் எண்ணிக்கை ஆயிரத்து 441 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் அறிவிக்கப்பட்ட மரணங்களில் 29 மரணங்கள் மே மாதம் 2ம் திகதி முதல் மே மாதம் 29 திகதிக்குட்பட்ட காலப்பகுதியிலும் நேற்றைய தினத்தில் மாத்திரம் 7 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.