ஜுன் மாதம் 8ம் திகதி முதல் சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக கொவிட் – 19 பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானி, இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்த்ர சில்வா தெரிவித்துள்ளார். சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸை செலுத்திய அதே மத்திய நிலையத்தில் இரண்டாவது டோஸும் உரிய திகதிகளில் செலுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நேற்றைய தினத்தில் மாத்திரம் 65 ஆயிரத்து 104 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரை மொத்தமாக 6 இலட்சத்து 66 ஆயிரத்து 612 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கொவிஷீல்ட் தடுப்பூசியானது மூன்று இலட்சத்து 45 ஆயிரத்து 789 பேருக்கு இதுவரை செலுத்தப்பட்டுள்ளது. இதேவேளை 16 ஆயிரத்து 664 பேருக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவு அறிவித்துள்ளது.