உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹசீமின் தீவிரவாத செயற்பாடுகளுடன் நெருங்கி செயற்பட்ட நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஒலுவில் பிரதேசத்தில் குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமையவே கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
2017ம் ஆண்டு காத்தான்குடி அலியார் வீதியில் சஹ்ரான் ஹசீமின் கொள்கைகளுக்கு எதிராக செயற்படும் நபர்களுடன் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றது. அதன்போது சஹ்ரான் ஹசீம் குறித்த பிரதேசத்திலிருந்து தப்பிச்சென்று, குறித்த சந்தேக நபரின் வீட்டிலேயே தங்கியிருந்தமை விசாரணைகளினூடாக தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட நபர் 55 வயதான ஒலுவில் பிரதேசத்தை சேர்ந்த திருமண பதிவாளரொருவரென தெரியவந்துள்ளது. சந்தேக நபர் தற்போது மட்டக்களப்பிலுள்ள பயங்கரவாத விசாரணை பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.