கொழும்பு துறைமுக நகரில் உருவாகும் தொழில் வாய்ப்புக்களில் 75 சதவீதமானவை இலங்கையர்களுக்கே வழங்கவேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கொழும் துறைமுக நகர சட்டமூலம் தொடர்பான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.
ஆளும்கட்சி எதிர்க்கட்சியைச் சேர்ந்த அனைவரும் இச்சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு ஆதரவு வழங்கவேண்டுமென்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.
கொழும்பு துறைமுகத்தின் நிர்மாண பணிகள் கடந்த 2014 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. கடலை நிரப்பி நிர்மாணிக்கப்படும் இந்த நிலப்பரப்பு 446.6 ஹெக்டயர் அளவைக் கொண்டதாகும். சர்வதேச தரத்திலான அலுவலக கட்டிடங்களும் சுகாதார சேவைகள் , கல்விச் சேவை , பொழுது போக்கு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கும் நிலையங்களும் துறைமுக நகரில் அமையவுள்ளன.
15 பில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்படும் ஒரு இலட்சத்து 30 ஆயிரத்த்pற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புக்கள் உருவாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. மொத்த தேசிய உற்பத்திக்கு இத்திட்டத்தின் ஊடாக 10 சதவீதத்தை தாண்டிய பங்களிப்பை பெற முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
துறைமுக நகரின் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கும் நிர்வகிப்பதற்கும் விசேட சட்டமூலத்தின் ஊடாக ஆணைக்குழுவொன்றை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் கடந்த 8 ம் திகதி பிரதமரினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன் பிரதமர் சார்பில் சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இச்சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி 19 தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதன் தீர்ப்பை சபாநாயகர் நேற்று அறிவித்தார். இதனால் சட்டமூலம் தொடர்பான இரண்டு நாள் பாராளுமன்ற விவாதம் இன்று முற்பகல் ஆரம்பமாகியது.