கொரோனா தொற்றாள் பாதிக்கப்பட்டுள்ள இந்தியா தற்போது புயல் தாக்கத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் புயல் தாக்கத்தினால் அதிகளவான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த பகுதிக்கு இன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோதி விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அத்துடன் கொவிட் தொற்றினால் இந்தியாவில் நேற்றைய தினம் அதிகூடுதலாக 4 ஆயிரத்து 525 மரணங்கள் பதிவாகியுள்ளன. அத்துடன் 2 இலட்சத்து 67 ஆயிரத்து 174 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றின் 2வது அலையில் இதுவரை 270 வைத்தியர்கள் இந்தியாவில் பலியாகியுள்ளனர். கொரோனா தொற்று ஆரம்பித்ததிலிருந்து இதுவரை ஆயிரத்து 118 வைத்தியர்கள் இந்தியாவில் மரணித்துள்ளனர். சுகாதார பணியாளர்களே தற்போது அதிகளவில் ஆபத்துக்கு முகம் கொடுத்துள்ளனர். இந்நிலையில் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர். அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டுள்ள போதும் மக்கள் பொறுப்பின்றி செயற்படுவதை ஊடகங்களில் காண முடிந்துள்ளது. இவ்வாறான நிலையில் எதிர்வரும் இரு வாரங்களில் கொரோனா 2வது அலை உச்சத்தை எட்டலாமென ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதேவேளை இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய வகை கொவிட் தொற்றுக்கு அமெரிக்காவின் தடுப்பூசியை பயன்படுத்த முடியுமென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பி.1.617 உருமாற்றமடைந்த வைரஸ் முதன்முறையாக கடந்த வருடம் இந்தியாவில் அடையாளம் காணப்பட்டது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் துரிதமாக வைரஸ் பரவலடைந்தது.
இந்நிலையில் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து தடுப்பூசிகளும் புதிய உருமாற்றமடைந்த வைரஸிற்கு எதிராக செயற்படக்கூடியதென அமெரிக்க சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய பைசர், மொடர்னா மற்றும் ஜோன்ஸன் என்ட் ஜோன்ஸன் தடுப்பூசிகளை இந்தியாவில் பயன்படுத்த முடியுமென அமெரிக்க சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.