வசந்தம் எப் எம் வானொலி இன்று 13 வருடங்களை பூர்த்தி செய்து 14வது ஆண்டில் கால்தடம் பதிக்கின்றது. வான் அலைகளில் வசந்தத்தை ஏற்படுத்திய வசந்தம் 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் செல்ல குழந்தையாய் பரிணமித்தது. கடந்த 13 வருடங்களாக நாட்டின் பொறுப்பு வாய்ந்த ஊடகம் என்ற அடிப்படையில் சமூக பொறுப்புடன் தனது பங்களிப்பை ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் வசந்தம் எப் எம் நிறைவேற்றியுள்ளது.
தனித்துவமான நிகழ்ச்சிகளின் ஊடாக நேயர்கள் மத்தியில் தனக்கான தனி அங்கீகாரத்தை தக்கவைத்துள்ள வசந்தம் காலத்திற்கேற்பட தனித்துவமான படைப்புக்களை மக்களுக்கு வழங்கி வருகின்றது. வசந்தம் எப் எம் வானொலியானது பொறுப்பு வாய்ந்த அரச ஊடகம் என்ற அடிப்படையில் நடுநிலையான செய்திகளை உறுதிப்படுத்தி மக்களுக்கு வழங்குவதோடு, சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகளை பொறுப்பு வாய்ந்தவர்களின் கவனத்திற்குகொண்டுவந்து அவற்றுக்கான தீர்வுகளையும் வழங்கியுள்ளது. வசந்தம் எப் எம் வானொலி சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையப்பின் தலைவர் சுதத் ரோஹண, பிரதம நிறைவேற்று அதிகாரி நலீன் குமார நிஷங்க, செயற்பாட்டு பணிப்பாளர் ஹஷந்த ஹெட்டியாராச்சி ஆகியோரின் வழிகாட்டுதலில் முன்னோக்கி பயணிக்கின்றது. நிகழ்ச்சி பிரிவானது பிரதி பொது முகாமையாளர் அசோக கருனாநாயக்கவின் நேரடி கண்காணிப்பின் கீழ் வசந்தம் எப் எம் இன் உதவி முகாமையாளர் எம்.எல்.கிருபாகரனின் வழிகாட்டுதலோடு செயற்படுகின்றது. இந்நிலையில் வசந்தம் எப் எம் இன் செய்தி பிரிவானது செய்தி மற்றும் நடப்பு விவகார பிரிவின் பிரதி பொது முகாமையாளர் சுதர்மன் ரதலியகொடவின் வழிகாட்டுதலுடன் உதவி முகாமையாளர் ஹர்ஷ தனஞ்சய பீரீஸின் கண்காணப்பின் கீழ் செயற்படுகின்றது.
கடந்த 13 வருடங்களாக நேயர்களின் அபிமானத்தை வென்றுள்ள வசந்தம் எப் எம் வானொலி தொடர்ந்தும் மக்களுக்கான நல்லப்படைப்புக்களை வழங்கும் எதிர்பார்ப்புடன் 14வது ஆண்டில் பயணத்தை தொடர்கின்றது. இன்றைய தினம் வசந்தத்தின் 13வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் கேட்போர் கூடத்தில் விசேட நிகழ்வு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் தலைவர் சுதத் ரோஹண தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது. வசந்தம் வானொலி 2008ம் ஆண்டு இதேபோன்றதோரு தினத்தில் ஆரம்பித்ததன் நோக்கம் மக்கள் மத்தியில் காணப்பட்ட பரிவிணைவாத எண்ணங்களை களைந்து இலங்கையர்கள் என்ற ரீதியில் முன்னோக்கி பயணிப்பதற்கேயென அதன்போது ஊடக வலையமைப்பின் தலைவர் சுட்டிக்காட்டினார். வசந்தம் வானொலியின் ஆரம்பத்திற்கு முக்கிய பங்காற்றிய முன்னாள் தலைவர் அநுரசிறிவர்தன மற்றும் அப்போதைய அரசாங்கத்திற்கு அதன்போது அவர் நன்றி தெரிவித்தார். வசந்தம் வானொலியானது ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்தை சரிவர உணர்ந்து வெற்றிகரமாக முன்னோக்கி பயணிப்பதாகவும் சுயாதீன ஊடக வலையமைப்பின் தலைவர் குறிப்பிட்டார். இதேவேளை வசந்தம் எப் எம் வானொலியின் நிகழ்ச்சி பிரிவில் பணியாற்றும் ஊழியர்களின் சேவையை பாராட்டி நிகழ்வின் போது சினைவுச்சின்னங்களும் வழங்கிவைக்கப்பட்டது. சுயாதீன ஊடக வலையமைப்பின் தலைவர் சுதத் ரோஹணவுக்கும் வசந்தம் எப் எம் ஊழியர்களினால் நினைவுச்சின்னம் ஒன்று வழங்கப்பட்டது.
இந்நிலையில் வசந்தம் எப் எம் இன் பிறந்த தினத்தை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள வசந்தம் பிரிமியர் லீக் கிரிக்கட் தொடர் எதிர்வரும் 24ம் 25ம் திகதிகளில் கிளிநொச்சி உதையதாரகை மைதானத்தில் நடைப்பெறவுள்ளது. அதன்போது வெற்றிபெறும் அணிகளுக்கான கேடயங்கள் இன்றைய தினம் சுயாதீன ஊடக வலையமைப்பின் தலைவரினால் கையளிக்கப்பட்டது. இந்நிலையில் இதுவரை காலமும் எம்மோடு இணைந்துள்ள எமது அபிமான நேயர்களுக்கும், விளம்பரதாரர்கள், அனுசரணையாளர்கள், நலன் விரும்பிகளென சகலருக்கும் அத்தருனத்தில் எமது இதயபூர்வமான நன்றியை பகிர்ந்துக்கொள்கின்றோம்.