தங்கொட்டுவ பகுதியில் கைப்பற்றப்பட்ட தேங்காய் எண்ணெய் அடங்கிய இரண்டு பௌசர்கள் குறித்த விசாரணை அறிக்கை துரிதமாக வழங்கப்படவுள்ளது.
பொலிஸ் அவசர அழைப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய தங்கொட்டுவ பகுதியில் தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிலையமொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இறக்குமதி செய்யப்பட்ட சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெய் அடங்கிய இரு பௌசர்கள் கடந்த 28 ஆந் திகதி பொலிசாரால் கைப்பற்றப்பட்டன. இவற்றில் 55,000 லீற்றர் தேங்காய் எண்ணெய் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்ததுடன் கடந்த 31 ஆந் திகதி இவை சுங்கப் பிரிவில் ஒப்படைக்கப்பட்டிருந்தன.
இவற்றில் புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனப் பதார்த்தங்கள் காணப்படுகின்றதா என்பது குறித்து கண்டறிவதற்காக இத்தேங்காய் எண்ணெய் மாதிரிகள் மூன்று நிறுவனங்களிடம் விசாரணை நடவடிக்கைகளுக்கென அனுப்பப்பட்டன. இதற்கமைய இலங்கை கட்டளைகள் நிறுவனத்தினால் வழங்கப்படவுள்ள மாதிரிகளின் அறிக்கை இன்று கிடைக்கவுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுதந்த டீ சில்வா தெரிவித்துள்ளார். அவ்வாறே மற்றைய இரு நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள மாதிரிகளின் முடிவுகளும் இன்றோ அல்லது நாளையோ கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இத்தேங்காய் எண்ணெயில் புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனப் பதார்த்தங்கள் உள்ளதா அல்லது இல்லையான என்பது குறித்த அவ்விசாரணைகளின் மூலம் உறுதி செய்ய முடியும். இதேவேளை நாட்டிற்கு தருவிக்கப்பட்ட புற்றுநோயைஏற்படுத்தும் இரசாயன பதார்த்தங்கள் அடங்கிய இத்தேய்காய் எண்ணெயின் ஒரு பகுதியை மீள் ஏற்றுமதி செய்யும் நடவடிக்கையும் தற்போது இடம்பெறுகின்றன.