யாழ் மாவட்டத்தை முற்றாக முடக்குவது தொடர்பில் பொதுமக்களே தீர்மானிக்க வேண்டுமென இராணுவத் தளபதி, கொவிட்-19 கட்டுப்பாட்டு செயலணியின் தலைவர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
யாழ் மக்கள் சுகாதார ஒழுங்கு விதிகளை உரிய முறையில் கடைபிடிக்க வேண்டும் அதனூடாக மாத்திரமே மாவட்டத்தை முற்றாக முடக்குவதை தவிர்க்க முடியுமென அவர் குறிப்பிட்டார். எவ்வாறெனினும் கொவிட் தாக்கத்தால் யாழ் மாவட்டத்தின் சில பகுதிகள் 10 தினங்களுக்கு முடக்கப்பட்டுள்ளன. இதனால் வர்த்தகர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வர்த்தகர்கள் பீ.சி.ஆர் பரிசோதனையை மேற்கொண்டு அதன் அறிக்கைகளை சுகாதார பிரிவினரிடம் கையளிக்க வேண்டும். அதன்பின்னர் வர்த்தக நிலையங்களை திறப்பதற்கான அனுமதி வழங்கப்படும் பொதுமக்களும் முடக்கப்பட்ட பகுதிகளுக்குள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றி பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கு பஸ்ஸில் பயணிப்போருக்கு பீ.சி.ஆர் மேற்கொள்ளப்படுகின்றன. வவுனியா விதை உற்பத்திகள் பண்ணைக்கு முன்பாக செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தொற்றுபரவலை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே குறித்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.