மேல்மாகாணத்திலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் சகல தரங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் நாளைய தினம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது. அது தொடர்பான விசேட சுற்றறிக்ககை கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேராவினால் வெளியிடப்பட்டுள்ளது.
மாகாண பிரதான செயலாளர்கள், கல்வி செயலாளர்கள், கல்வி பணிப்பாளர்கள், வலய கல்வி பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் மாணவர்களை பாடசாலை சுற்றுச்சூழலுக்கு பழக்கப்படுத்துவதோடு, அவர்களுது உள நலத்தை மேம்படுத்துவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்க வேண்டுமெனவும் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் மாணவர்களுக்கான பரீட்சைகள் அல்லது போட்டிகளுக்கான ஏற்பாடுகளை தவிர்த்துக்கொள்ளுமாறும், சமூக இடைவெளியை பேணி கற்றல் நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறும் கல்வி அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
15 மாணவர்களை கொண்ட வகுப்புக்களை தொடர்ச்சியாக முன்னெடுக்க முடியுமெனவும், 16 முதல் 30 வரையுள்ள மாணவர்களை இரண்டு பிரிவினராக பிரித்து கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 30க்கும் கூடுதலாக மாணவர்கள் காணப்படும் பட்சத்தில் 3 பிரிவுகளாக பிரித்து கற்றல் செயற்பாடுகளுக்கு சமமான நாட்கள் ஒதுக்கப்பட வேண்டுமெனவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.