கொவிட் 19 தொற்று பரவல் காரணமாக உலகம் முழுவதும் சுமார் 70 மில்லியன் சிறுவர்கள் வாசிப்பு திறனை இழந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் யுனிசெப்பின் வறுமை ஒழிப்பு குழு ஆய்வொன்றை நடத்தியுள்ளது. உலகிலுள்ள 10 வயது சிறார்களில் அரைவாசிக்கும் அதிகமானோர் இவ்வருட இறுதியில் வாசிப்பு திறனில் பலவீனமானவர்களாக இருப்பதற்காக வாய்ப்புள்ளதாக குறித்த குழு வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் வாக்கியங்களை புரிந்துகொள்வதற்கான திறனும் அவர்களிடம் குறைவாக இருக்குமென குறிப்பிடப்பட்டுள்ளது. கொவிட் தொற்று பரவலால் கல்வி கற்கும் சந்தர்பங்களை சிறுவர்கள் அதிகளவில் இழந்துள்ளனர். இதன் தாக்கம், இவ்வருட இறுதிக்குள் புலப்படுமென ஆய்வு குழு தெரிவித்துள்ளது. உலக வங்கி, யுனிசெப் மற்றும் அமெரிக்க ஐ.நா. சனத்தொகை தரவு என்பவற்றின் மதிப்பீடுகளை அடிப்படையாக கொண்டு குறித்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதேவேளை கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சுமார் ஒரு பில்லியன் சிறுவர்களின் கல்வி வளம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.