இளம் முயற்சியாளர்கள் தேசிய உடை அணிவதில் பெருமிதம் அடைய முடியுமென பிரதமர் தெரிவித்துள்ளார். இளம் கைத்தொழில் முயற்சியாளர்களின் சபையின் ஆண்டு நிறைவில் இணைந்து கொண்ட போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை இளம் முயற்சியாளர்கள் சபையின் 22வது ஆண்டு நிறைவு விழா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பில் இடம்பெற்றது. இராஜாங்க அமைச்சர்களான காஞ்சன விஜயசேக்கர, செஹான் சேமசிங்க, தயாசிறி ஜயசேக்கர, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ன, இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.
“இலங்கை இளம் முயற்சியாளர்களின் சங்கத்துக்கு 22 வருடங்கள் பூர்த்தியாகின்றன. 1999ஆம் ஆண்டு இச்சபை உருவாக்கப்பட்டது. இன்று போல் அந்நிகழ்வு எனக்கு ஞாபகத்தில் உள்ளது. நான் அப்போது கடற்றொழில் அமைச்சராகவிருந்தேன். 17 பேரே இதனை ஸ்தாபிக்க முன்னோடியாக செயற்பட்டனர். இந்த 17 பேரும் மிகவும் தைரியத்துடன் இலக்கை நோக்கி செயற்பட கூடியவர்களாக இருந்தனர். இதனாலேயே 22 வருடகால நீண்ட பயணத்தை மேற்கொண்டுள்ளது. இவ்வமைப்பில் தற்போது பல்வேறு துறைகளையும் சார்ந்த 222 உறுப்பினர்கள் காணப்படுவதாக அதன் தலைவர் எனக்கு கூறினார். அதேபோன்று நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 600 பில்லியன் அளவிலான பங்களிப்பை இவர்கள் வழங்குகின்றனர். அதுமாத்திரமன்றி நான்கு இலட்சத்துக்கும் கூடுதலானோருக்கு தொழில்வாய்ப்புக்களையும் வழங்கியுள்ளது.”