பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க இரண்டாவது நாளாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தை புறக்கணித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோகன தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாகவும் இதற்கு நிதி பயன்படுத்தப்பட்ட விதம் குறித்தும் ஐக்கிய மக்கள் சக்தியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார். பாராளுமன்ற உறுப்பினரின் இக்கருத்துக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனயின் 6 பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்திருந்தனர்.
இதற்கமைய, வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக வருகை தருமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அறிவித்தது. எனினும், நேற்றைய தினத்திலும் அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகை தரவில்லை. இன்று அவர் சார்பில் சட்டத்தரணி ஒருவர் மாத்திரம் வருகை தந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.