இவ்வருடத்துக்கான தேசிய விளையாட்டு சபையின் புதிய திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
தேசிய விளையாட்டு சபையின் தலைவர் மஹேல ஜயவர்தன உள்ளிட்ட உறுப்பினர்கள் பலரும்; இதில் கலந்து கொண்டனர். புதிய கொள்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து இதன்போது விளக்கமளிக்கப்பட்டது. விளையாட்டு சட்டமூலத்தை மறுசீரமைத்தல், பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கட் போட்டிகளை நடத்துதல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து அமைச்சர் இதன்போது கருத்து தெரிவித்தார்.
“நாம் வரலாற்றை நோக்கினால் விளையாட்டு கொள்கை தொடர்பாக நாம் கதைத்த போதிலும்;, விளையாட்டு சட்டமூலத்தினால் இதற்கு கிடைக்கின்ற பங்களிப்புக்கள் குறித்து பேசப்படவில்லை. விளையாட்டு சட்டமூலங்கள் புதுப்பிக்கப்பட வேண்டுமென நாம் தீர்மானித்தோம். செயலாளரின் தலைமையில் இதற்கென குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. கிராமங்களுக்குச் சென்று விளையாட்டு கழகங்களை சந்தித்து அவர்களது கருத்துக்களும் பெறப்படும். 50 வருடங்களாக மறுசீரமைக்கப்படாதுள்ள இச்சட்டமூலத்தை ஓரிரு மாதங்களுக்குள் மறுசீரமைக்காமல் அதுகுறித்து ஆராய்ந்து அடுத்து வரும் 100 ஆண்டுகளுக்கேனும் பொருந்தும் வகையில் விளையாட்டு சட்டமூலம் மறுசீரமைக்கப்பட வேண்டியுள்ளது. எந்தவொரு பாடசாலையும் மாபெரும் கிரிக்கட் போட்டி தொடரை நடத்த முடியும். அதற்கு தேவையான விளையாட்டு மைதானங்களை வழங்க எம்மால் முடியும். கிரிக்கட்டுக்கு மாத்திரமன்றி மற்றைய விளையாட்டுக்களுக்கும் சுகாதார அமைச்சினால் வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் ஊடாக பாடசாலை மட்டத்தில் போட்டிகளை நடத்த முடியும். விளையாட்டின் எதிர்காலம் குறித்து கூடிய கவனம் செலுத்த வேண்டியுள்ளது.”