கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை இரணை தீவில் அடக்கம் செய்வதற்காக எடுத்துச் செல்லும் போது பின்பற்ற வேண்டிய விசேட வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள தொடர் வழிமுறைகளின் பிரதிகள் 16 தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது.
வழிமுறைகளுக்கு அமைய உயிரிழப்பவரின் உறவினர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு இதுகுறித்து உடனடியாக அறிவிக்க வேண்டும். இதனை எழுத்துமூலம் சுகாதார அதிகாரிகள் குறித்த உறவினர்களுக்கு வழங்க வேண்டும். சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்படுகின்ற ஆவணங்கள் உடல்களை இரணைதீவுக்கு எடுத்துச் செல்வதற்கு செல்லுப்படியாக அமைகின்றன.
உடல்களை எடுத்துச் செல்வதற்கு தேவையான பெட்டியை உயிரிழந்தவரின் உறவினர்களால் வழங்கப்பட வேண்டும். உடல்களை எடுத்துச் செல்லும் போது புகைப்படம் எடுப்பதோ வீடியோ எடுப்பதோ முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. கொழும்பு நகராக இருந்தால் அடக்கம் செய்யப்படுகின்ற இடத்துக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டதன் பின்னர் நாளாந்தம் அதிகாலை 5.30ற்கு நாச்சிக்குடா முனையம் வரை உடல் எடுத்துச் செல்லப்படும். சடலத்தை அடையாளம் காண வைத்தியசாலைக்கு வருகை தரும் இரண்டு உறவினர்களுக்கு மாத்திரம் இரணை தீவு வரை செல்ல அனுமதிக்கப்படுகின்றது. இந்த உறவினர்கள் தனிமைப்படுத்தல் சட்டத்திட்டங்களை கடுமையாக பின்பற்ற வேண்டியுள்ளதுடன், சுகாதார ஊழியர்களுடன் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும். எந்தவொரு காரணத்துக்காகவேனும் உடல் வைக்கப்பட்டுள்ள பெட்டியை திறப்பதற்கு அனுமதி கிடைப்பதில்லை. இறுதி கிரியைகளில் இரு உறலினர்களும் சுகாதார மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளினதும் பங்கேற்றலுடன் மாத்திரம் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவ்வழிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.