தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாகவும் அரசாங்கத்திற்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்திற்கு உதவி செய்யுமாறும் ஜனாதிபதி தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரச மற்றும் அரச சார்பான நிறுவனங்கள், கூட்டுதாபனம் சபைகள் போன்றனவற்றில் நீண்டகாலமாக தீர்க்கபடாதுள்ள சம்பள முரண்பாடுகள் மற்றும் பதவி உயர்வுகள் போன்றவற்றை தீர்த்து வைக்க அரசாங்கம் அர்ப்பணிப்புச் செய்துள்ளதாக ஜனாதிபதி மேலும் வலியுறுத்தினார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்த தொழிற்சங்க சம்மேளனத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதனை தெரிவித்தார். ஜனாதிபதி அலுவலக மண்டபத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது. இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, பொது மக்கள் பாரிய எதிர்பார்ப்புக்களுடனேயே இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்ததாக தெரிவித்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தொழிலாளர்களுக்காக குரல் கொடுத்து கோரிக்கைகளை வென்றெடுத்த தலைவர் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தமது அரசாங்கமும் இக்கொள்கையையே பின்பற்றுவதாக வலியுறுத்தினார். தொழிற்சங்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி பிரச்சினைகளை தீர்த்து வைக்க எப்போதும் தயார் என ஜனாதிபதி வலியுறுத்தினார். கொவிட் பரவலுக்கு மத்தியில் சுற்றுலா கைத்தொழில் உள்ளிட்ட பெரும்பாலான வறுமான வழிகள் தடைப்பட்டன. எனினும் தொழிலுக்காக காத்திருந்த 60 ஆயிரம் பட்டதாரிகளுக்கும் 35 ஆயிரம் வறிய குடும்பங்களுக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்க அரசாங்கத்தினால் முடிந்தது. அடுத்த கட்டத்தின் போது மேலும் 35 ஆயிரம் பேரை இணைத்துக் கொள்ளவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
“வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரத்தையுடைய நாட்டையே நாம் பொறுப்பேற்றோம். நாட்டை எவ்வாறு முன்னெடுத்துச் செல்ல வேண்டிய வழிமுறைகளை நாம் எமது கொள்கை பிரகடனத்தில் கூட சுட்டிக்காட்டினோம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொழிற்சங்கவாதிகளின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்தவர் என்பதை நீங்கள் அறிவீர்கள். அக்கொள்கையையே நாங்கள் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வோம். தொழிற்சங்க உரிமைகளை பெற்று கொடுப்பதற்கும் அவர்களினது பங்களிப்பை தொடர்ந்தும் பெற்று கொள்வதற்கும் நாம் செயற்படுவோம். நீங்கள் அனைவரும் என்னையும் எனது அரசாங்கத்தையும் ஆட்சி பீடத்தில் அமர்த்துவதற்கு அர்ப்பணிப்புச் செய்தீர்கள் என்பதை நாம் நன்கு அறிவோம். அதேப்போன்று கடந்த அரசாங்கத்தில் பல்வேறு அசௌகரியங்களுக்கும் சிரமங்களுக்கும் முகங்கொடுத்தீர்கள். அரசாங்கத்தை ஏற்படுத்தியதை போன்று வெற்றிகரமாக அதனை முன்னெடுத்துச் செல்வதற்கும் உங்களது அர்ப்பணிப்பை எதிர்பார்க்கின்றோம்.”
சகல கூட்டுதாபனங்களுக்கும் தொழில் பணிப்பாளர் ஒருவரை நியமிக்குமாறு முற்போக்கு தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தலைவரும் அமைச்சருமான காமினி லொகுகே, ஜனாதிபதியிடம் யோசனை தெரிவித்தார். 180 நாட்களை பூர்த்தி செய்த போதிலும் நிரந்தர நியமனம் கிடைக்காத உள்ளுராட்சிமன்றங்களில் சேவையாற்றுகின்றவர்களின் தொழலை பாதுகாப்பதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்ஷ இதன்போது தெரிவித்தார். மக்கள் பிரதிநிதிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.