உலகின் கவனம் ஈர்க்கப்பட்ட நிலையில் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத்தொடரில் வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்தன வீடியோ தொழில்நுட்பம் ஊடாக நேற்று உரையாற்றினார். இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை தோற்கடிக்கச் செய்வதற்கு ஆதரவு வழங்குமாறு அமைச்சர் தினேஸ் குணவர்தன நட்பு நாடுகளிடம் இதன்போது கோரிக்கை விடுத்தார்.
“நான் உங்கள் மத்தியில் உரையாற்றுகின்ற இச்சந்தர்ப்பத்தில் மனித உரிமைகள் தொடர்பாக உயர்ஸ்தானிகர் அலுவலகம் முன் ஒருபோதும் இல்லாதவாறு முன்னெடுத்த பிரச்சார செயற்பாடுகளுடன் இலங்கை குறித்த அறிக்கையொன்றையும் சமர்ப்பித்துள்ளது.
3 தசாப்தங்களாக இடம்பெற்ற மோதல்களையடுத்து 2009ஆம் ஆண்டில் இலங்கை முப்படையினர், எல்ரீரீஈ அமைப்பை யுத்த ரீதியில் பலவீனமடையச் செய்தது.
பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதையடுத்து சகல மனித உரிமைகளையும் விட இலங்கை மக்களுக்கு வாழும் உரிமையை பெற்று கொடுத்தோம். அதனை நாங்கள் உறுதி செய்தோம்.
இவ்வாறு இருக்கையில் இலங்கைக்கு எதிராக போலி தகவல்கள் அடங்கிய யோசனையை கொண்டு வர ஒருசில சக்திகள் செயற்பட்டன. நட்பு நாடுகளின் உதவியுடன் அதனை தோற்கடிக்க எம்மால் முடிந்தது. 2015ஆம் ஆண்டில் ஆட்சி பீடம் ஏறிய அரசாங்கம் மனித உரிமைகள் பேரவை முன்வைத்த 30ஃ1 யோசனைக்கு இணை அனுசரணை ரீதியில் தொடர்புப்பட்டிருந்தது.
நிறைவேற்ற முடியாததும் இலங்கையின் அரசியல் யாப்புக்கு முரணான பல்வேறு விடயங்கள் இதில் உள்ளடக்கப்பட்டிருந்தன.
இந்நடவடிக்கையானது பயங்கரவாத செயற்பாடுகள் மீண்டும் தலை தூக்குவதற்கு சந்தர்ப்பம் ஒன்றை வழங்கி 2019ஆம் ஆண்டில் ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்படுவதற்கு காரணமாக அமைந்தது.
நூற்றுக் கணக்கான உயிர்கள் கொல்லப்பட்டதுடன், தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இது காணப்பட்டது.
மேன்மை தாங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மாபெரும் வெற்றியையடுத்து 30ஃ1 யோசனையை இலங்கை தெளிவாக நிராகரித்தது.
இதனையடுத்து 43வது கூட்டத்தொடரில் இலங்கை இவ்யோசனையின் இணை அனுசரணையில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தது.
கொவிட் 19 அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்தி 2ஃ3 பெரும்பான்மையுடனான அரசாங்கத்தை நாம் அமைத்தோம்.
இவ்வாறு இருக்கையில் தனி நாடு ஒன்றை இலக்கு வைத்து மற்றுமொரு யோசனையை முன்வைக்க திட்டமிடப்பட்டமை கவலைக்குரிய விடயம் ஆகும்.
இறைமையுள்ள நாட்டின் உள் விவகாரங்களிலும் நிர்வாகம் தொடர்பில் பெரும்பாலான விடயங்களை உள்ளடக்கி தயாரிக்கப்பட்டுள்ள இவ்வறிக்கையை இலங்கை நிராகரிக்கின்றது.
எமது தொடர் பங்களிப்பையும் புரிந்துணர்வையும் சிறந்த பண்பாக கருதி இலங்கைக்கு எதிரான எவ்வாறான யோசனைகளையும் நிராகரித்து ஆதரவு வழங்குமாறு நான் இப்பேரவையின் அங்கத்தவர்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.
முன் ஒருபோதும் இல்லாதவாறு உலகம் முகங்கொடுத்துள்ள தொற்றுக்கு மத்தியில் குரோதத்தை விட பேரவைக்குள் இணக்கப்பாடு இன்றியமையாதது.
மேற்கூறப்பட்ட விடயங்களை கருத்திற் கொண்டு பேரவையினால் இந்த யோசனையை நிராகரித்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென நாம் கேட்டுக் கொள்கின்றோம்.”